பதிவு செய்த நாள்
05
செப்
2021
07:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில், ஜமுனாமரத்துார் அடுத்த தென்மலை பலாமரத்துார் காப்புக்காடு பகுதியில், 10-ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் கால நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து, வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர்செல்வம் கூறியதாவது: மூன்றரை அடி அகலம், நான்கு அடி உயரம் கொண்ட கல்லில், இடது புறம் வீரன் ஒருவன் தனது இடது கையில் வில்லையும், அம்பையும் தாங்கி கொண்டு, வலது கையில் குறுவாளை உருவி உயர்த்தியவாறு பிடித்து சண்டையிடும் காட்சி செதுக்கப்பட்டு உள்ளது. இந்த வீரனின் தலையில் கொண்டை பின்புறமாகவும் கழுத்தில் அணிகலனாக சவடி, இருகைகளில் தோள்வளையும் அணிந்து இடையில் உடுத்தப்பட்டுள்ள ஆடை தொடை வரை நீண்டு, தனது இடது காலை முன்வைத்து போரிட செல்வது போல காட்டப்பட்டுள்ளது. வீரனின் வலது புறம் புலி ஒன்று ஆக்ரோஷமாக காட்டப்பட்டுள்ளது. எனவே இப்புலியை எதிர்த்து போரிட்ட போது, வீரன் மரணம் அடைந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. ஊரில் உள்ள ஆடு, மாடு, மக்களையோ தாக்கும் புலியை எதிர்த்து சண்டையிட்டு உயிரை விடும் வீரரை, நடுகல் எடுத்து வழிபடும் வழக்கம் பல்லவர் காலம் தொட்டே வழக்கில் உள்ளது. இவ்வகையான நடுகற்களை ‘புலிகுத்திபட்டான் கல்’ என்று அழைப்பர். இவை, 10-ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் கால நடுகல். இந்த நடுகல்லை வைகாசி மாதம் பொங்கல் வைத்து இப்பகுதி மக்கள் வழிபாடு செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.