நத்தம்:நத்தம் கல்லுாரி மாணவர் சந்தோஷ் 20, களிமண்ணால் பிள்ளையார் தயாரித்து அசத்துகிறார். நத்தம் மூங்கில் பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ் 20. சிவகங்கையில் இளங்கலை 2ம் ஆண்டு படிக்கிறார். கைவினைப் பொருள் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டவர். கடவுளர்கள், விலங்குகள், பறவைகள் என களிமண்ணில் சிலைகள் செய்து அசத்துகிறார். விநாயகர் சதூர்த்தியையொட்டி இவர் உருவாக்கிய களிமண் பிள்ளையார் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தானே கற்ற கலை: 5 அடி வரை சிலைகளை உருவாக்கும் இவர், இக்கலையை சுயமாகவே கற்று, பொழுது போக்காக செய்கிறார்.அவர் கூறியதாவது: சிறுவயது முதலே பார்க்கும் எதையும் களிமண்ணால் வடிவமைப்பதில் ஆர்வம் உண்டு. அதுவே எனது பயிற்சியாகவும் அமைந்தது. இதனை நான் வியாபாரத்திற்காக செய்யவில்லை. மனதுக்கு பிடித்திருப்பதால் செய்கிறேன், என்றார்.