பதிவு செய்த நாள்
07
செப்
2021
12:09
தொண்டாமுத்தூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மற்றும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால், கோவில் வாசலில் நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவையில், நேற்று அமாவாசையையொட்டி, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ஆகிய நான்கு கோவில்களில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என, கலெக்டர் சமீரன் அறிவித்திருந்தார். அதன்படி, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், நேற்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால், கோவிலில், சுவாமிக்கு வழக்கம்போல அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. மருதமலை கோவிலுக்கு வந்த பக்தர்கள், அடிவாரத்திலுள்ள படிக்கட்டு பகுதியிலும், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முன் மைதானத்தில் நின்றும் சுவாமியை வழிபட்டு சென்றனர்.
சிவகாசியிலிருந்து வந்திருந்த பக்தர் பாண்டியராஜன் கூறுகையில்,"சிவகாசியிலிருந்து, குடும்பத்துடன் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்தோம். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் அனுமதி இல்லை என்பதால், அமாவாசை தினமான நேற்று வந்தோம். ஆனால், கோவையில், நேற்று முக்கிய கோவில்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது தெரியவில்லை. இதனால், கோவிலின் வெளியே நின்று சுவாமியை வழிபட்டு சென்றோம்,"என்றார்.