கோவில் நிலங்களின் உரிமையாளர் கடவுள் தான்: உச்ச நீதிமன்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2021 08:09
புதுடில்லி : கோவில்கள் அமைந்துள்ள நிலத்துக்கு உரிமையாளர், அந்த கோவிலில் உள்ள கடவுள் தான். அர்ச்சகரோ, பூசாரியோ இல்லை என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவில் நிலங்களை பூசாரியோ, அர்ச்சகரோ விற்பதை தடுக்கும் நோக்கில் மத்திய பிரதேச அரசு நில வருவாய் சட்டத்தின் கீழ் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இதன்படி கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் உரிமையாளர்களாக அர்ச்சகர் அல்லது பூசாரி பெயர் இருந்தால் அதை நீக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ம.பி. அரசு மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் போபன்னா, ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில் கூறியதாவது: கோவில் நிலத்தின் உரிமையாளர், அந்த கோவிலில் உள்ள கடவுள் தான். அர்ச்சகரோ அல்லது பூசாரி யோ இல்லை. அதனால் கோவில் நில பத்திரத்தில் உரிமையாளர் என்ற இடத்தில் கோவிலில் உள்ள தெய்வத்தின் பெயர் தான் இடம் பெற வேண்டும். பூசாரி அல்லது அர்ச்சகர் பெயர் இடம் பெறக் கூடாது. கோவில் நிலத்தை நிர்வகிக்கும் உரிமை மட்டுமே, பூசாரி அல்லது அர்ச்சகருக்கு உண்டு. அதனால் மத்திய பிரதேச அரசின் அறிவிப்பை அம்மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.