பதிவு செய்த நாள்
13
செப்
2021
10:09
திருப்பரங்குன்றம் : மதுரை விளாச்சேரியில் நவராத்திரிக்காக கொலு பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சீசனுக்கேற்ப சுவாமி சிலைகள், அரசியல் தலைவர்களின் சிலைகள், 3 இன்ச் முதல் 15 அடி உயரம்வரை விநாயகர் சிலைகள் மற்றும் இரண்டரை அடி உயர மெகா சைஸ் அகல் விளக்குகள், கிறிஸ்து குடில்கள் ஆகியன களிமண், காகிதகூழ், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சிமென்ட் ஆகியவற்றால் தயாரிக்கின்றனர். நவராத்திரி விழாவிற்காக தற்போது கொலு பொம்மைகள் தயாரிக்கப் படுகின்றன.
ராமலிங்கம், ஹரிகிருஷ்ணன் கூறியதாவது: இது எங்கள் பரம்பரை தொழில். இந்தாண்டு புதிதாக ஸ்ரீராமஜெய பெருமாள், நவ நரசிம்மர், அஷ்ட திக்கு பாலகர்கள் செட்டுகள், லலிதாம்பிகை, அங்காள ஈஸ்வரி, சாரதா தேவி, ஆகிய சிலைகள் ஒரு அடி உயரத்தில் களிமண்ணில் தயாரித்துள்ளோம். மலேசியா முருகன், பாலமுருகன், ஐயப்பன், விநாயகர், நடராஜர் சிலைகள் காகித கூழ்மூலம் மூன்றரை அடி உயரம், சிவன், பார்வதி, லட்சுமி நாராயணன், காமாட்சி, அம்மன் இரண்டு உயரத்திலும் தயாரித்துள்ளோம். சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு களிமண், காகிதகூழ் ஆகியவற்றால் மட்டுமே சிலைகள் தயாரிக்கிறோம்.கொரோனாவால் 5 மாதங்கள் தொழில் முடங்கியது. தற்போது கொலு பொம்மைகள் வாங்க வருபவர்களுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளது. வர இயலாதவர்களின் வீடுகளுக்கு பொம்மை சப்ளை செய்கிறோம் என்றனர்.