பதிவு செய்த நாள்
13
செப்
2021
05:09
தஞ்சாவூர், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் அகில உலக துணைத்தலைவர் ஸ்ரீமத் கவுதமானந்த மகராஜ் பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கினார்.
தஞ்சாவூர் சிவாஜி நகரில் ராமகிருஷ்ண மடத்தின் நகர மையமும், புன்னைநல்லுார் மாரியம்மன் கோவில் அருகே வடவாற்றின் கரையில் கிராம மையம் செயல்படுகிறது. கிராம மையத்தில் உள்ள பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கோவில் திருப்பணி மகா கும்பாபிஷேம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில், ராமகிருஷ்ண மடத்தின் அகில உலகத் துணைத்தலைவர் ஸ்ரீமத் கவுதமானந்த மஹராஜ் கலந்துக்கொண்டார். நகர மையமான சிவாஜி நகரில், கோவிந்தபுரம் விட்டல் தாஸ் மகராஜ் தலைமையிலான குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடந்தது.
சிகா–கோ சிறப்புரை தினத்தில், திருவையாறு அரசு இசைக் கல்லுாரி முதல்வர் புவனேஸ்வரி குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட நீதிபதி சத்தியமூர்த்தி சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவால் உலக நாடுகளிடையே ஏற்பட்ட மாற்றம், இந்தியா பெற்ற பெருமைகள் குறித்து பேசினார். தொடர்ந்து கொரோனா நோய் தொற்று காலத்தில் கற்றது என்ன என்பது குறித்த பத்து தலைப்புகளில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரியுடன் இணைந்து ஆன்லைன் முறையில் நடந்த கவிதை மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 30 ஆயிரம் மதிப்பிலான பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை அகில உலக ராமகிருஷ்ண மடத்தின் துணைத்தலைவர் ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்த மகராஜ் வழங்கினார். மாலை கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கராத்தே சிலம்பாடடம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் கோவிந்தபுரம் பாலாஜி பாகவதரின் உபன்யாசம் நடந்தது.
தொடர்ந்து நேற்று கோவிலில் ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி சுவாமி விவேகானந்தருக்கு சிறப்பு ஆராதனை செய்து பக்தர்களுக்கு மந்திர தீட்சை அளித்து அகில உலக ராமகிருஷ்ண மடத்தின் துணைத்தலைவர் கவுதமானந்த மஹராஜ் அருளாசி வழங்கி பேசினார். அப்போது கலைகளின் தலைநகரமாக விளங்கும் தஞ்சையில் ராமகிருஷ்ண மடம் தொடங்கி ஓராண்டில் பல்வேறு சேவை பணிகளை செய்துள்ளது பாராட்டுக்குரியது. சென்னை கிளை மடமாக இருந்தது இனி பேலூரை தலைமையிடமாகக் கொண்டு நேரடி கிளை ஸ்தாபனமாக தஞ்சை ராமகிருஷ்ண மடம் செயல்படும். தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்தர் மகராஜ் திருமூவரின் கருத்துக்களை பொதுமக்களிடம் அதிக அளவில் கொண்டு சேர்ப்பார். நமது பண்பாடு, கலாச்சாரத்தை ஒவ்வொருவரும் கடைபிடித்து பெரியோர்களின் ஆசியுடன், தன்னம்பிக்கை உடையவர்களாக சத்தியம், தர்மம் வழியில் வாழ வேண்டும் என பேசினார்.
மூத்த துறவிகள் சத்தியஞானானந்த மகராஜ், யதாத்மானந்தா மகராஜ், சுகதேவானந்த மகராஜ், ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் அபவர்கானந்த மகராஜ், வேத பிரியானந்த மகராஜ், சமாகிதானந்த மகராஜ், பரமசுகானந்த மகராஜ், குணஸாகரனந்த மகராஜ், நரவரானந்த மகராஜ், மாத்ரு சேவானந்த மகராஜ், திருக்குற்றாலம் அகிலானந்த மகராஜ், மதுரை சிம்மக்கல் ராமகிருஷ்ண தபோவனம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ராமகிருஷ்ண மடத்தின் துறவியர்கள்,. தஞ்சை மூத்த இளவரசர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, திருச்சி சிதம்பரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பாவ பிரசார பரிஷத் கன்வீனர் பாண்டுரங்கன் வரவேற்றார். பேராசிரியை இந்திரா தஞ்சாவூரில் ராமகிருஷ்ண இயக்கம் தொடக்கம் மற்றும் பணிகள் குறித்து விளக்கி பேசினார். ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பாலகுரு நன்றி கூறினார். ஏற்பாடுகளை தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.