பதிவு செய்த நாள்
14
செப்
2021
06:09
தஞ்சாவூர்: மணிப்பூர் கவர்னர் இல.கணேசன், குலதெய்வ கோவில், சுவாமிமலை முருகன் கோவில்களில், நேற்று வழிபாடு நடத்தினார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த பா.ஜ., மூத்த தலைவரான இல.கணேசன், சமீபத்தில் மணிப்பூர் கவர்னராக பொறுப்பேற்றார். நேற்று விமானம் மூலம் திருச்சி வந்த அவர், காரில் தஞ்சாவூருக்கு சென்றார். கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்.பி., ரவளிப்ரியா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து, அவரை வரவேற்றனர். பின், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற இல.கணேசனுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மூலவர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார். தொடர்ந்து, குலதெய்வ கோவிலான மகாராஜபுரம் காத்தாயி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். பின், அவர் கூறியதாவது: நான் உளமாற பிரார்த்தனை செய்யும் இடம் சுவாமிமலை கோவில் தான். நான் செய்த பிரார்த்தனைகள், முருகன் அருளால் நிறைவேறியுள்ளன. அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் போது, தஞ்சை பெரிய கோவிலுக்கு வருவேன். இயற்கையிலேயே அழகான மணிப்பூர், பாரத நாட்டின் சுவிட்சர்லாந்து. அம்மாநில மக்கள் உழைப்பாளிகள், தொன்மையானவர்கள். கலையின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள். அதனால், எனக்கு தஞ்சாவூரில் இருப்பது போலவே தோன்றுகிறது. இவ்வாறு இல.கணேசன் கூறினார்.