பதிவு செய்த நாள்
15
செப்
2021
10:09
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லிபாபு, 32, என்ற பக்தர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், வரதராஜ பெருமாள் கோவிலில், கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் கேட்டு, 2019ல் விண்ணப்பித்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், வீட்டு மனைகள் எத்தனை; அதன் மூலம் எவ்வளவு வாடகை கிடைக்கிறது.கடந்த 2012 - 18ம் ஆண்டு வரை வசூல் செய்யப்பட்ட வாடகை எவ்வளவு, பாக்கி எவ்வளவு. அதை வசூல் செய்வது தொடர்பாக நீதிமன்றங்களில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன.கடந்த 2015 - 20ம் ஆண்டில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பை அகற்ற, நீதிமன்றம் உத்தரவிட்டும் அகற்றப்படாததற்கு காரணம் என்ன?
வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான வருவாய் ஆவணங்களின்படி எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது. மொத்த சொத்தின் மதிப்பு எவ்வளவு.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை. கோவில் நிலம் குறித்த பதிலுக்கு, 448.43 ஏக்கர் நிலம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அண்ணாமலை, 65, என்ற பக்தர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், அதே வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மொத்தம் எத்தனை ஏக்கர் உள்ளது என சமீபத்தில் கேட்டிருந்தார். இந்த கேள்விக்கு, 177.20 ஏக்கர் என, கோவில் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.ஒரு கேள்விக்கு இருவித பதில் அளிக்கப்பட்டதால், பக்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வரதராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் கூறுகையில், கோவில் அலுவலக கண்காணிப்பாளர் பதில் அளித்துள்ளார். அதில் தவறு ஏற்பட்டுள்ளது. 260 ஏக்கர் நிலங்கள் மற்றும் கட்டளை நிலங்கள் விடுபட்டிருக்கும். பதிவேட்டை பார்த்துதான் சொல்ல முடியும், என்றார்.