பதிவு செய்த நாள்
17
செப்
2021
04:09
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவில் பங்கேற்க, காட்டிலிருந்து வந்த எட்டு யானைகளுக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு வழங்கி, நேற்று அரண்மனை வளாகத்துக்குள் அழைத்து செல்லப்பட்டன.அடுத்த மாதம் நடக்கவுள்ள, உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவில் பங்கேற்க நாகர ெஹாளே வீரனஹொசஹள்ளி வனப்பகுதியிலிருந்து, எட்டு யானைகள் கடந்த 13 ல் புறப்பட்டது. மறு நாள் மைசூரு அரண்ய பவன் வளாகத்துக்கு வந்தன.இரண்டு நாட்கள் பராமரிப்புக்கு பின் நேற்று நகருக்குள் அழைத்து வரப்பட்டன. அரண்மனையின் ஜெயமார்த்தாண்டா நுழைவு வாயில் முன் நிறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பூரண கும்ப மரியாதையுடன் மேளதாளங்கள், போலீஸ் இசை வாத்தியத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.கரும்பு, வெல்லம், தேங்காய் என யானைகளுக்கு விதவிதமான உணவு வழங்கப்பட்டன. மைசூரு மேயர் சுனந்தா பாலநேத்ரா, கூட்டுறவு துறை அமைச்சர் சோமசேகர், பா.ஜ.,- எம்.எல்.ஏ.,க்கள் ராமதாஸ், நாகேந்திரா உட்பட பலர் யானைகள் மீது மலர் துாவினர்.யானைகள் வந்ததால், மைசூரு தசரா விழா கலை கட்ட துவங்கியுள்ளது.