பதிவு செய்த நாள்
17
செப்
2021
04:09
சென்னை: திருச்செந்தூர், திருத்தணியில் உள்ள முருகன் கோயில்கள், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில்களில், மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வருடன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இத்திட்டத்தில் தற்போது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் ஆகிய இரண்டு கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது விரிவுப்படுத்தப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய மூன்று கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல்வர் ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்ட அன்னதானத் திட்டத்தின் வாயிலாக இம்மூன்று கோயில்களிலும் நாள்தோறும் சுமார் 7,500 பக்தர்கள் பயனடைவார்கள். இந்த அன்னதானத் திட்டத்தின்கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை உணவு பரிமாறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.