மண்டல காலத்துக்கு தயாராகிறது சபரிமலை: கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2021 02:09
சபரிமலை; நவம்பர் மாதம் தொடங்க உள்ள சபரிமலை மண்டல காலத்துக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு தயாராகிறது. சீசனில் பணியாற்ற தற்காலிக ஊழியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சபரிமலையில் தற்போது புரட்டாசி மாத பூஜைகள் நடைபெற்று வருகிறது. தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் குறைவான பக்தர்களே வருகின்றனர். கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதும், கேரளா சென்று வந்தால் தனிமையில் இருக்க வேண்டும் என்று சில மாநிலங்கள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதும் இதற்கு காரணமாக கருதப்படுகிறது. புரட்டாசி பூஜையில் தினமும் வழக்கமான பூஜைகளுடன் களபாபிேஷகம், உதயாஸ்தமன பூஜை, படிபூஜை போன்ற சிறப்பு பூஜைகளும் நடந்து வருகிறது. செப்.21 வரை நடை திறந்திருக்கும்.நவ., 16ல் தொடங்க உள்ள மண்டல காலத்துக்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தொடங்கியுள்ளது. சீசனில் சபரிமலையில் பணியாற்ற விருப்பம் கொண்ட ஹிந்து இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க செப். 30 கடைசி நாள். கடைகளுக்கான டெண்டர் பணிகளும் தொடங்கியுள்ளது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான மேல்சாந்தி குலுக்கல் தேர்வு அக்.,17 காலை சன்னிதானத்தில் நடைபெறும். இதற்கான நேர்முகத்தேர்வு பணிகளும் தொடங்கியுள்ளது. கடந்த சீசனில் முதலில் இரண்டாயிரம், பின்னர் ஐந்தாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது மாத பூஜையில் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் சீசனில் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் தினமும் அனுமதிக்க வாய்ப்பு உள்ளதாக தேவசம்போர்டு வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரள சுகாதரத்துறை அனுமதிக்குமா என்ற சந்தேகமும் நிலவுகிறது.