கோவை: ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பை தொடர்ந்து, கோவை கோனியம்மன் கோவிலில் நேற்று பக்தர்களுக்கு இலையில் அன்னதானம் பரிமாறப்பட்டது.கொரோனா தொற்று பரவல் காரணமாக, கோவில்களில் அன்றாடம் பரிமாறப்பட்டு வந்த அன்னதானம் பாக்கெட்டுகளாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.இந்த நடைமுறை நேற்று முதல் நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வரிசைப்படி டோக்கன்கள் வழங்கப்பட்டு, அன்னதானக்கூடத்தில் இலை விரித்து பரிமாறப்பட்டது.கோனியம்மன் கோவில் செயல் அலுவலர் கைலாஷ் கூறுகையில்,அரசு உத்தரவுப்படி இலையில் அன்னதானம் பரிமாறப்பட்டது. அதில் இனிப்பு, சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், அப்பளம் ஆகியவை இடம்பெற்றன. விசேஷ நாட்களில் உபயதாரர்கள் வழங்கும் உணவு பதார்த்தங்களையும் பரிமாறுவோம், என்றார்.