பதிவு செய்த நாள்
27
ஜூன்
2012
11:06
ராசிபுரம்: கைலாசநாதர் கோவிலில், ஆனித்திருமஞ்சனம் விழா கோலாகலமாக நடந்தது.ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு ஸ்வாமி தர்மசம்வர்த்தினி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், ஆனித்திருமஞ்சனம் விழா நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை 6 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜ ஸ்வாமிக்கு, பால், தயிர், இளநீர், தேன், மஞ்சள், பன்னீர் மற்றும் பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஹோமங்கள், தேவாரம், திருவாசகம் பாராயணம் நடந்தது. காலை 9 மணிக்கு தீபாராதனையும், பிரசாதமும் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிப்பட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கைலாசநாதர் சிவனடியார் திருக்கூட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்தனர்.