பதிவு செய்த நாள்
23
செப்
2021
04:09
ஈரோடு: சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில், ராமாம்ருத தரங்கிணி ரதயாத்திரை நேற்று துவங்கியது. இந்தியாவின் புகழ் பெற்ற நதிகளான துங்கபத்ரா, தாமிரபரணி, காவிரி, பிரம்மபுத்திரா, கோதாவரி, கிருஷ்ணா, கங்கா, யமுனா, சிந்து உள்ளிட்ட, 16 நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித நீர் அயோத்திக்கு ராமர் கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதற்கு முன்னதாக ஒரு கோடி வீடுகளுக்கு கொண்டு சென்று, பொதுமக்கள் பூஜித்து வழிபட ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த புனித நீர் வைக்கப்பட்ட ரதம் ஈரோடு வந்தது. ஈரோடு மாவட்டம் முழுவதும் சுற்றிவர, மாவட்ட சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை, ஈஸ்வரன் கோவில் அருகில் இருந்து, ராமாம்ருத தரங்கிணி ரதயாத்திரை துவங்கியது. பழையபாளையம், திண்டல், சூரம்பட்டி பகுதிகளுக்கு சென்றது. அமைப்பு நிர்வாகிகள் சாமிரத்தினம், அர்த்தனாரி, ஜெகநாதன், மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.