பழநி,:பழநி மலைக்கோயிலில் புதிதாக அமையும் 2வது ரோப்கார் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது.பழநி மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வின்ச், ரோப் கார் சேவைகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இதுதவிர படிப்பாதை, யானைப் பாதை வழியாக நடந்தும் மலைக்கு செல்ல முடியும்.தற்போது கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் குடமுழுக்கு மண்டபம் வழியாக யானை பாதையை அடைந்து மலைக் கோவிலுக்கு செல்கின்றனர்.கடந்த 2019 ஆம் ஆண்டு புதிதாக 2வது ரோப் கார் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து இதற்கான பணி துவங்கியது. பின்னர் கொரோன தொற்று ஊரடங்கால் பணிகள் பாதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்குப்பின் சில மாதங்களாக மீண்டும் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய சில இயந்திர பாகங்கள் வருவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அதேசமயம் கட்டுமான பணிகளும் மந்தமாக நடைபெற்று வருகிறது. கோயில் அதிகாரிகள் பணிகளை முடுக்கிவிட்டு, 2வது ரோப்கார் சேவையை விரைவில் செயல்படுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.