தொண்டி : தொண்டி அருகே பாழடைந்த பெருமாள் கோயிலை புதுப்பிக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தொண்டி அருகே வட்டாணத்தில் பல நுாறு ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான லட்சுமிநாராயண பெருமாள் கோயில் உள்ளது. நான்கு அடி உயரத்தில் கையில் சக்கரத்துடன் பெருமாள் காட்சியளிக்கிறார். லட்சுமி, நாகநாதர், ஆஞ்சநேயர் சிலைகளும் உள்ளன. கோயில் சுற்றுசுவர் இடிந்து காணப்படுகிறது. கோயிலின் உள்ளே முட்புதர்கள் மண்டியுள்ளது.கோயில் மேல் பகுதியில் செடிகள் அடர்ந்து பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ளது. மண்டபம் மற்றும் விமானம் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் கோயிலுக்குள் செல்ல அப்பகுதி மக்கள் அச்சமடைகின்றனர்.
இது குறித்து வட்டாணம் ஜெகநாதன் கூறியதாவது:தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இக் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. கோயிலில் உள்ள கல்வெட்டுகளை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தால் பல்வேறு தகவல் கிடைக்கும். பக்தர்கள் வழிபாடு செய்யும் வகையில் கோயிலை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.