அக்.,6ல் முடியும் மகாளய பட்சம்: யாருக்கு எப்போது தர்ப்பணம் செய்யலாம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2021 09:09
மதுரை: முன்னோர்கள் நம் வீட்டு வாசலுக்கு வரும் காலமாக இந்த மகாளய பட்சம் கருதப்படுகிறது. இந்த 15 நாட்களும் விரதம் இருந்து, தர்ப்பணம் கொடுப்பது சிறப்பானது. இந்த காலத்தில் காகத்திற்கு தினமும் அன்னம் வைப்பது முக்கியம்.காஞ்சி மஹாபெரியவர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக்கொண்டிருந்த போது ஒரு பக்தர் இது குறித்து கேள்வி எழுப்பினார்.மகாளய பட்ச காலத்தில் தினமும் காகத்திற்கு ஏன் உணவு வழங்க வேண்டும். அது எப்படி நம் முன்னோர் அம்சமாக கருதப்படுகிறது.
எத்தனையோ பறவைகள் இருக்க ஏன் காகத்திற்கு மட்டும் உணவு வழங்க வேண்டும் என்று கேட்டார்.அதற்கு காஞ்சி மஹாபெரியவர் அளித்த விளக்கம்: உயிரினங்களிலேயே அதன் குரல் மூலம் அழைக்கப்படும் ஒரே உயிரினம் காகம் தான்.பூனை மியாவ் என கத்துகிறது. அதை மியாவ் என அழைக்கிறோமா. கிளி கிக்கி என கத்துகிறது அதை கிக்கி என அழைக்கிறோமா. காகத்தை மட்டும் தான் அப்படி அழைக்கிறோம். அதுவே அதன் முதல் சிறப்பு.அடுத்து வார்த்தைகள். கா என்றால் காப்பாற்று என அர்த்தம். காகத்திற்கு சாதம் வைத்துவிட்டு கா..கா.. என கத்துகிறோம். அப்படியெனில் நமது முன்னோர்களை அழைத்து நம்மை காப்பாற்றுங்கள் என கேட்பதாக அர்த்தம்.மேலும் அது எங்கும் எப்போதும் இருக்கும் பறவை. நாம் தேடி அலைய வேண்டியதில்லை. மிகவும் அறிவானது, அழகானது.
ஏன் தெரியுமா. அதிகாலையில் விழித்து விடும். நம்மையும் எழுப்பி விடும். அந்த நேரத்தில் எழுந்து நமது நித்திய கடமைகளை செய்ய துாண்டுகிறது.பிற உயிரினங்கள் போல தனித்து உண்பதில்லை. எது கிடைத்தாலும் உடனே குரல் எழுப்பி தனது இனத்தாரை அழைத்து பகிர்ந்து உண்கிறது.மாலை சூரியன் மறைந்ததும் கூட்டுக்கு சென்று விடுகிறது. சூரியன் மறைந்தபின் உண்ணக்கூடாது என்ற வேதங்களின் அறிவுரையை கடைபிடிக்கிறது. இதை நாம் எத்தனை பேர் கடைபிடிக்கிறோம்.இதுபோன்று முன்னோர் கூறும் பல அறிவுரைகளை நமக்கு வழங்குகிறது.நாம் உணவு வைப்பதால் அது மகிழ்கிறது.... காகம் சாப்பிடுவதால் நாம் மகிழ்கிறோம்...இருவரும் பகவான் என்கிறது அத்வைதம். எனவே அத்வைதத்தையும் நமக்கு விளக்குகிறது.அதற்கு உணவு வழங்கச்சொன்ன நமது முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. தெளிவான காரணம் உள்ளது.
மரங்களில் தனிச்சிறப்பு உள்ள மரம் ஆலமரம். பரம்பரையை அடையாளம் காட்டும் மரம் அது. மரங்களுக்கு அரசனாக போற்றப்படும் மரம் அரச மரம். கடவுளின் அடையாளமாக போற்றப்படுகிறது. இந்த இரு மரங்களையும் யாராவது விதை வைத்து நடவு செய்து பார்த்திருக்கிறீர்களா... கிடையாது. ஆனால் அது வளர்கிறது.இயற்கை அதற்கென சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது. காகத்தின் எச்சங்கள் மூலமே இம்மரங்கள் விதைக்கப்பட்டு வளர்கிறது. இந்த இரு மரங்களும் உயிர்வாழ வேண்டும் என்றால் காகங்கள் உயிர் வாழ வேண்டும்.எனவே அதற்கு உணவளிக்கிறோம். இந்த மரங்களை பார்க்கும்போதெல்லாம் நமது முன்னோர் நினைவு வர வேண்டும்... காகங்களுக்கு உணவளிக்க வேண்டும்.இவ்வாறு காஞ்சி மஹாபெரியவர் கூறினார்.