பதிவு செய்த நாள்
29
செப்
2021
09:09
சென்னை :ஹிந்து மக்கள் கட்சி சார்பில், சிந்து நதி தரிசனம், புனித நீராடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஹிந்து மக்கள் கட்சி சார்பில், அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஒரு குழுவினர், நாட்டின் வடக்கு எல்லை பகுதியான லே-, லடாக்கில் உள்ள சிந்து நதிக்கு சென்றனர். அங்கு மூன்று முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
புஷ்கர புண்ணிய காலம்: இது குறித்து, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது:நம் தேசத்தில் ஏழு புண்ணிய நதிகள் உள்ளன. அதில், பிரதானமானது மற்றும் மிகவும் புண்ணியமானது சிந்து நதி. நம் நாகரிகமும், சிந்து சமவெளி நாகரிகம் என, வரலாற்று ஆராய்ச்சியாளர்களாக அறியப்படுகிறது. நாடு பிரிவினை அடைந்த காலத்தில் சிந்து மாகாணம், சிந்து நதியின் பெரும்பகுதி, பாகிஸ்தான் வசம் சென்று விட்டது. வாஜ்பாய் காலத்தில் இருந்து தான், சிந்து தரிசனம் என்ற அற்புத நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கும்ப ராசிக்கு உரிய சிந்து நதியில், புஷ்கர புண்ணிய காலம் வர இருக்கிறது.அகில பாரத சன்னியாசிகள் பேரவை சார்பில், சிந்து நதியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, புஷ்கர விழா நடத்தப்பட்டுள்ளது.
எனவே, ஹிந்து மக்கள் கட்சி சார்பில் சிந்து தரிசனம், சிந்து புஷ்கரம், சிந்து நதியில் புனித நீராடல் நிகழ்ச்சியை நடத்தினோம். அடுத்ததாக, மறைந்த இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் உள்ளிட்ட ஹிந்து சமயத்திற்காக பாடுபட்ட, 160 பேர்களுக்கான தர்ப்பண நிகழ்ச்சியும், சிந்து நதிக்கரையில் நடத்தப்பட்டது.அரசியல் சாசனப் பிரிவு, 370 ரத்து செய்யப்பட்ட பின், லடாக் பகுதி மக்களின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. அந்த பகுதி அமைச்சர், எம்.பி.,க்களை சந்தித்து உரையாடினோம்.
ராணுவத்தினருக்கு ராக்கி: லடாக் எல்லையில் உள்ள பக்கிம் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, நுாம்ரா பள்ளத்தாக்கு ஆகியவற்றை, சீனா ஆக்கிரமிப்பு செய்தபோது, பிரதமர் மோடி, நம் ராணுவத்தினர் வாயிலாக முறியடித்தார்; அந்தப் பகுதிகளையும் பார்வையிட்டோம்.உலகின் உயர்ந்த பனி மலைப் பகுதியான சியாச்சின் சென்று, அங்குள்ள ராணுவத்தினருக்கு ராக்கி கட்டி, ஹிந்து மத வழிபாட்டில் பங்கேற்க செய்து, வாழ்த்துக்களை தெரிவித்து கவுரவித்து ஊக்கப்படுத்தினோம்.இவ்வாறு அவர் கூறினார்.