சென்னை: ‛‛இறை சொத்து இறைவனுக்கே, என்று ஹிந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது, என்று அமைச்சர் சேகர் பாபு உறுதிபட தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள், சொத்துக்கள் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையிலான அதிகாரிகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மீட்கப்பட்டுள்ள நிலங்கள் எவ்வளவு? எந்த கோவிலுக்குச் சொந்தமான இடம்? மதிப்பு எவ்வளவு? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக https://hrce.tn.gov.in/hrcehome/landretrieval_search.php என்ற இணையதளத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டது.
அமைச்சர் சேகர்பாபு இன்று (செப்.,29) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான 150 கிரவுண்டு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.500 கோடி இருக்கும். கீழ்ப்பாக்கத்தில் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான 49 கிரவுண்டு நிலம் தற்போது மீட்கப்பட்டுள்ளது. கோவிலுக்குச் சொந்தமான இடங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு வருகிறோம்.
கோவிலுக்குச் சொந்தமான இடங்களை ஒருவர் பெற்று வேறொருவர் பயன்படுத்தி வருவதை கண்டறிந்து அதையும் மீட்டு வருகிறோம். கோவில் இடங்களை புதிதாக ஆக்கிரமிக்க முயல்வதையும் கண்டறிந்து அதையும் முறியடித்து வருகிறோம். சென்னிமலையில் ஓர் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. மீட்கப்படும் நிலங்களின் வருமானத்தை கோவிலை நிர்வகிக்கவும், பணியாளர்களுக்கும் செலவிட இருக்கிறோம். கோவில் இடத்தில் வணிக வளாகம் கட்டி அதன்மூலம் வருமானம் ஈட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். ‛இறை சொத்து இறைவனுக்கே என்று ஹிந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்..