பதிவு செய்த நாள்
29
செப்
2021
12:09
உடுமலை: நவராத்திரி விழாவையொட்டி வீடுகள், கோவில்களில் வைக்கப்படும் கொலுவிற்காக, பல்வேறு வடிவிலான பொம்மைகள் உடுமலையில் விற்கப்படுகிறது.
நவராத்திரி கொலு விழா, அக்., 7ல், துவங்குகிறது. இதனையொட்டி, வீடுகளில், பலரும், ஒன்பது படிக்கட்டுகள் வடிவில் கொலு அமைத்து, கடவுள், குழந்தைகள், விலங்குகள், பறவைகள், தலைவர்கள் என பலவித பொம்மைகளை அலங்கரித்து வைப்பர்.தினமும், கொலு பொம்மைகளுக்கு பூஜை செய்து அங்கிருக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பிரசாதம் வழங்கி மகிழ்வர்.அவ்வகையில், உடுமலை நகரில், நவராத்திரி விழாவையொட்டி, கடைகளில், பல்வேறு வடிவிலான பொம்மைகள், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பெண்கள், தாங்கள் விரும்பும் பொம்மைகளை ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். அவற்றில், குறிப்பிடத்தக்க வகையில் சிவன், பார்வதி, முருகன், விநாயகருடன் கைலாயத்தில் அமர்ந்திருக்கும் காட்சி கொண்ட பொம்மை, சரவணப் பொய்கையில் தாமரை மீது முருகன் அவதரித்த கோலம், ராவணன் ஆட்சி மன்றக்கூடம் என, பல வண்ணச்சிலைகள் தத்ரூபமாய் காணப்படுகிறது.விற்பனையாளர் ரமேஷ் கூறியதாவது:கொலு பொம்மைகள், 50 முதல், 4 ஆயிரம் ரூபாய் விற்கப்படுகிறது. அதேபோல், கொலு செட் பொம்மைகள், 150 முதல், 3 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.இவை அனைத்தும், தர்மபுரி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது. அதிலும், விதவிதமான மர பொம்மைகள், கர்நாடகாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.அதில், கருங்காலி மரத்தில் உருவாக்கப்பட்ட மரப்பாச்சி பொம்மைகளுக்கு மவுசு அதிகமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினர்.