பதிவு செய்த நாள்
01
அக்
2021
02:10
நவராத்திரி மிக அருகில் நெருங்கி வந்துவிட்ட நிலையில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கொலு பொம்மைகள், வாங்குவாரின்றி தேங்கிக்கிடப்பதால், பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள எளிய மக்கள், துயரத்தின் பிடியில் சிக்கி துவண்டுள்ளனர்.
கொலு பொம்மைகள் விற்குமிடம், கோவில் மற்றும் கோவிலைச்சுற்றி உள்ள பகுதிகள் என்பதால், நவராத்திரிக்கு முன் வரக்கூடிய வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலை திறப்பதும், மக்கள் பேரமேதும் பேசாமல் கொலு பொம்மைகளை வாங்குவதும் மட்டுமே, இவர்களின் பிரச்னைகளை கொஞ்சமாவது தீர்க்கும்.இன்றிலிருந்து மூன்று தலைமுறைக்கு முன், காஞ்சிபுரம் அஸ்தகிரி தெருவில் வசித்து வந்த சொக்கலிங்கம் என்பவர் மண்பானை செய்து தரும் தொழில் செய்து வந்தார். ஒரு முறை வரதராஜப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற நவராத்திரி பிரம்மோற்சவ கருட வாகன புறப்பாட்டை, நீண்ட நேரம் பார்த்து, அந்த காட்சிகளை மனதில் வாங்கியவர், வீடு திரும்பியதும் தான் பார்த்த காட்சிகளை வீட்டில் உள்ள களிமண் கொண்டு உருவாக்கினார்.
இவர் செய்த கடவுள் உருவ பொம்மைகளை பார்த்த உறவினர்களும், நண்பர்களும், தங்களுக்கும் அது போல செய்து தரக்கேட்டு, அதன்படி அவரும் செய்து தர, இப்படி ஆரம்பித்தது தான் நவராத்திரி கொலு.கோவிலில் நடைபெற்ற கூடுதல் விழாக்களையும், மற்ற கோவில் தெய்வங்களையும் அடுத்தடுத்து செய்ய ஆரம்பித்தார்.
அவர் எவ்வளவு செய்தாலும், அதை விட தேவை அதிகமாக இருக்கவே, தன்னைச் சுற்றியிருந்த பலரையும், பொம்மை செய்யும் கலையில் ஈடுபடுத்தினார். இதன் காரணமாக, பொம்மை செய்யும் தொழில், பலரது குடும்பத் தொழிலானது. இதன் காரணமாகவே, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் பக்கத்தில் உள்ள, அஸ்தகிரி தெருவின் பெயரே இன்று பொம்மைக்கார தெருவாகிவிட்டது. இந்த தெருவில் உள்ள பெரும்பாலானோர், கொலு பொம்மை செய்பவர்களே. முப்பது வீடுகள், முப்பது நிறுவனங்களாக மாற, ஒவ்வொரு நிறுவனத்தின் கீழும் குறைந்தது முப்பது பேர் வேலை பார்த்து சம்பாதிக்க, ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள், நேரடியாகவும், மறைமுகமாகவும், இந்த பொம்மை தொழிலால் பலனடைந்து வந்தனர்.
ஆண்டு முழுதும், இந்த பொம்மை செய்யும் தொழிலில் ஈடுபட்டு, அவர்கள் தயாரிக்கும் பொம்மைகள் யாவும் விநாயகர் சதுர்த்தியன்று ஆரம்பித்து, அடுத்த ஒரு வாரத்திற்குள் விற்றுத் தீர்ந்துவிடும்.
ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநில மக்களின் நவராத்திரி பொம்மை தேவையையும், காஞ்சிபுரம் கொலு பொம்மைகள்தான் நிறைவேற்றி வந்தன. மும்பை போன்ற வட மாநிலங்களில், நவராத்திரி பண்டிகை, துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடப்பட்டாலும், அவர்களுக்கு தேவையான துர்கை பொம்மைகள், இங்கு இருந்துதான் சென்றன.
இங்கு செய்யப்படும் சுவாமி, அம்மன் சிலைகள் தத்ரூபமாக இருப்பதுடன், ஆண்டுதோறும், புதுமையான சிலைகள் செய்வதும், இயற்கைக்கு ஊறு ஏற்படாத களிமண்ணால் செய்வதும்தான், காஞ்சிபுரம் பொம்மைகளுக்கு இவ்வளவு மதிப்பு வரக்காரணம். காதி கிராப்ட் போன்ற அரசு நிறுவனங்களிலும், பெரிய தனியார் நிறுவனங்களிலும் விற்கப்படும் கொலு பொம்மைகள், பெரும்பாலும் காஞ்சிபுரத்து பொம்மைகளே.
எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. இந்த கொரோனா எல்லோரது வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது போல், இவர்களது வாழ்க்கையையும் அசைத்துப் பார்த்துவிட்டது.வழக்கமாக இங்கு, ஆண்டுக்கு, ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான கொலு பொம்மைகளை உற்பத்தி செய்து விற்றுவிடுவர். ஆனால், கொரோனா காரணமாக கடந்த ஆண்டு, அனைத்து பொம்மைகளுமே விற்காமல் தேங்கிவிட்டன. இதனால், இவர்களில் பலர் பெரும் கடனாளியாகி மீளமுடியாத நிலையில் உள்ளனர். இருந்தும், இத்தனை காலமாக சோறு போட்டு மரியாதை வாங்கித்தந்த இந்தக்கலை, நம்மைக் கைவிடாது என்ற நம்பிக்கையுடன், பழைய பொம்மைகளுடன் கொஞ்சம் புது பொம்மைகளையும் செய்து, இந்த ஆண்டு, வாடிக்கையாளருக்காக காத்திருந்து ஏமாந்து, தற்போது விரக்தியின் உச்சத்தில் உள்ளனர்.
அன்றாடம் சாப்பாடு உள்ளிட்ட அவசியத் தேவைக்காக, காஞ்சிபுரம் பொம்மைக்கார தெரு வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை என சொல்லும்படியாக, பொம்மைகளை வீட்டு வாசலிலும், வாசலை ஒட்டியுள்ள தெருவிலும், போட்டு விற்கும் அவலம் நடந்து வருகிறது. பொம்மை விற்ற வீடுகளில், பெண்கள் மளிகை பொருட்கள் விற்பனை செய்கின்றனர்; ஆண்கள் வேறு வேலை தேடிச் செல்கின்றனர். இந்த நிலை மாற ஒரே வழி, மக்கள் முன்பு போல அல்ல... முன்பை விட அதிகமாக கொலு பொம்மைகளை வாங்கி, அவர்களை ஆதரிக்க வேண்டும்.
காஞ்சிபுரத்தில் மட்டும் அல்ல, விழுப்புரம் கடலுார் மதுரை போன்ற பொம்மை செய்யும் பல இடங்களிலும் தொடரும் இந்த அவலம் துடைத்து எறியப்பட வேண்டும். இதனால் காப்பாற்றப்படப்போவது, கொலு பொம்மை கலைஞர்கள் மட்டும் அல்ல, அரிய கொலு பொம்மை தயாரிப்பு என்ற கலையும் கூட.
நவராத்திரி சிறப்பு: நவராத்திரி என்பது, குழந்தைகள் பெண்கள் பெரியவர்கள் என, வீட்டில் உள்ள அனைவரையும், மகிழ்ச்சி படுத்தும் விழாவாகும்.ஒவ்வொரு நாளும், உறவும், நட்பும் வீடுகளுக்கு வருவதால், உறவு மலரும்; நட்டு புதுப்பிக்கப்படும்.சிற்றுண்டி. சிறு பரிசு பரிமாறல் என, குதுாகலம் பொங்கும். பெரிய பாடகர்களாக வந்தவர்கள் பலர், நவராத்திரிக்கு வீடுகளில் பாடி ஆரம்பித்தவர்கள்தான். இந்த கொரோனா காலத்தில், நம் வீட்டையே கோவிலாக்கிக் கொள்ளும் வல்லமையை, இந்த கொலு நமக்கு தரும். ஒன்பது நாட்களும் நம்மால் அலங்கரித்து வைக்கப்பட்ட தெய்வங்கள், நமக்கு அருள்பாலித்து காத்தருள்வர் என்பதுடன், நமது உள்ளமும், இல்லமும் மகிழச் செய்யும் நவராத்திரி கொலுவை, அவரவர், அவரவர் சக்திக்கேற்ப இந்த ஆண்டு, அனைவரது வீட்டிலும் வைப்போம், மகிழ்வோம்.இந்த தொழில் சார்ந்த எளியவர்களை வாழ்விப்போம்.
காஞ்சிபுரம் களிமண், காகிக்கூழ் பொம்மைத் தொழிலாளர்கள் குலாலர் நலச்சங்க பொதுச் செயலாளர் கே.பத்மநாபன் கூறியதாவது:தமிழகத்திலேயே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் தான் களிமண் எடுக்க போடப்பட்ட தடை நீக்கப்படாமல் இருக்கிறது. களிமண்தான் எங்கள் மூலப்பொருள். இதன் காரணமாக, 500 ரூபாய்க்கு வாங்கக்கூடிய களிமண்ணை, ஐந்து ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. இந்த தடையை நீக்க, பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை.
இவ்வளவு விலை கொடுத்து வாங்கி, நாங்கள் செய்த களிமண்
பொம்மைகள் விற்பனை ஆகாமல் தேங்கிக் கிடப்பது எங்கள் வேதனையை இன்னும் அதிகரிக்கிறது.வீதியில் விநாயகரை வைத்து வழிபட தமிழகத்தில் மட்டும்தான் தடை இருந்தது. புதுச்சேரியிலும், ஹைதராபாத்திலும் தடை இல்லை நாங்கள் செய்த சிலைகளை, அங்கே கேட்கிறார்கள். கொண்டு போக அனுமதி கொடுங்கள் என்று கேட்ட போது, குடோன்களை விட்டு, விநாயகர் வெளியே வரவேகூடாது என, போலீசார் கடுமையாக கூறிவிட்டனர். இதனால், நாங்கள் செய்த விநாயகர் சிலைகள் எல்லாம் வீணாகிப்போனது. இப்போது, நவராத்திரிக்கு செய்துள்ள பொம்மைகள் எல்லாம், நவராத்திரிக்கு முந்தைய, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், கோவில்களிலும், கோவிலைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் தான் விற்பனையாகும். ஆனால், வெள்ளி, சனி, ஞாயிறுகளில், பக்தர்கள் கோவிலுக்கு வரத்தடை இருந்தால், இந்த பொம்மைகளும் விற்காது. ஆகவே அரசு பெரிய மனது வைத்து, இந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்; நாங்கள் வாழ வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -