திருப்புல்லாணி சக்கர தீர்த்த தெப்பக்குளம் முன்பு இடிபாடுகளுடன் உள்ள இரண்டாம் நாள் மண்டகப்படி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2021 09:10
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 44 வதாக திகழ்கிறது. திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் முன்புறம் உள்ள சக்கரத்தீர்த்த குளத்தின் அருகே கிழக்குப் பகுதியில் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இரண்டாம் நாள் மண்டகப்படி கட்டடம் அமைந்துள்ளது. தற்போது மண்டகப்படி கட்டடம் இடிபாடுகளுடன், மரங்கள் வளர்ந்தும் பக்கவாட்டு சுவர்கள் விரிசலுடன் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. திருப்புல்லாணியைச் சேர்ந்த வீரத் தளவாய் வெள்ளையன் சேர்வை வரலாற்று மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ரெ.வை. ரெத்தினகுமார் கூறியதாவது; பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களில் திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பெரிய தேரோட்டம் நடப்பது வழக்கமாகும். அதனை முன்னிட்டு வீதியுலா புறப்பாடு நேரங்களில் ஒன்று முதல் பத்து நாட்களுக்கு விமரிசையாக மண்டகப்படிகளில் முன்பாக சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி முன்பு நடந்துள்ளது. காலப்போக்கில் மண்டகப்படி மண்டப கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளதால் சம்பந்தப்பட்ட மண்டகப்படி விழா மறைந்துவிட்டது. கடந்த ஆண்டு வெள்ளையன் சேர்வை வரலாறு மீட்பு குழுவின் மூலமாக 8 ஆம் நாள் மண்டகப்படி புதுப்பிக்கப்பட்டு ஆகமவிதிப்படி புதுப் பொலிவு பெற்றது. அங்கே உற்சவமூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த 70 ஆண்டுகளுக்கு பிறகு மண்டகப்படி புதுப்பொலிவு பெற்றுள்ளது. தற்போதுள்ள இரண்டாம் நாள் மண்டகப்படி கட்டடம் சேதம் அடைந்துள்ளதால் அதனை பழமை மாறாமல் புதுப்பித்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர இந்து சமய அறநிலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.