பதிவு செய்த நாள்
28
ஜூன்
2012
10:06
கோபிசெட்டிபாளையம்: கோபி, அலிங்கியம் பத்ரகாளியம்மன், வீரமார்த்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது. காங்கேயம் நாட்டில், 300 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, தூரன் குலத்தவர்கள் குடிபெயர்ந்து, பவானி ஆறுபாயும் அலிங்கியம் பகுதிக்கு வந்தனர். தாங்கள் சுமந்து வந்த கூடையில் உருண்டை வடிவிலான கல்லைக் கண்டு, இதை ஏன் சுமக்க வேண்டும் என எண்ணி இரண்டு முறை அப்புறப்படுத்தினர். ஆனாம், அந்தக்கல் கூடையிலேயே இருந்தது. மூன்றாவது முறையாக அப்புறப்படுத்த முயன்றபோது தெய்வீகத் தன்மையால் கல் நிலை கொண்டது. நம்முடன் வந்தது குலதெய்வமான தேவி ஸ்ரீ பத்ரகாளி அம்மனே என புரிந்து கொண்டு, அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இத்திருத்தலமே அலிங்கியம். அருகில் வீரமாத்தியம்மன் வீற்றுள்ளார். ஆண்டுதோறும் சித்திரை விழாவில் பெண்களுக்கு பூஜித்த திருமாங்கல்ய சரடு வழங்குவது தொன்று தொட்ட மரபாக இருந்து வருகிறது. சிறப்புக்குரிய தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு, திருப்பூர் எம்.பி., சிவசாமி தலைமையில் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு, பல லட்சம் ரூபாய் செலவில் அழகிய வேலைப்பாடுகளுடன் திருப்பணி முடிக்கப்பட்டுள்ளது. கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.
கோவில் வளாகத்தில் யாஹ குண்டம் அமைக்கப்பட்டு கணபதிஹோமம், நவக்கிரஹ ஹோமம், தன பூஜை, கோபூஜை, திரவ்யாஹுதி, பூர்ணாகுதி ஹோமங்கள் நடந்தன. நாளை காலை, 9.40 மணிக்கு மேல் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், கும்ப கலசங்களுக்கு ஊற்றப்பட்டு வேத விற்பன்னர்களின் மஹா மந்திரங்கள் முழங்க, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. தமிழக வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், ரமணீதரன், நாராயணன் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை திருப்பணி குழுத் தலைவர் எம்.பி., சிவசாமி, விழாக் குழுத் தலைவர்கள் சுப்பிரமணியம், பழனிசாமி, பொருளாளர் பெருமாள்கவுண்டர், வெங்கிடு ஆகியோர் செய்துள்ளனர்.