கடலுார்: திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலுார், திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலில் 40 ஆண்டுகாலமாக தேசிகர் தவம் புரிந்து தேவநாதசாமி மற்றும் ஹயக்கிரீவரை வழிபட்டதாக ஐதீகம். இங்குள்ள தேசிகருக்கு ஆண்டுதோறும் பிரம் மோற்சவவிழா 12 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தேசிகர் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சிறப்பு அலங்காரத்துடன் பெருமாள் மற்றும் தேசிகர் கொடியேற்றத்தின் போது அருள்பாலித்தனர். தொடர்ந்து, தேசிகருக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. வரும் 15ம் தேதி ரத்தனங்கி சேவை, 17ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.