சூலூர்: மகாளய அமாவாசையை ஒட்டி, சூலூர் வட்டார கோவில்களில் நடந்த பூஜையில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முக்கியமானதாகும். மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் புண்ணிய நாளாகும். இதையொட்டி, சூலூர் சுற்றுவட்டார சிவன், பெருமாள், அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கட்டுப்பாடுகள் விதிக்கிப்பட்டிருந்தன. பக்தர்கள், சுவாமி தரிசனத்துக்கும் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
கிராம கோவில்களில் வழக்கம்போல், அமாவாசை பூஜைகள் நடந்தன. கரவளி மாதப்பூர் ஸ்ரீ மாதாங்கி அம்மன் கோவிலில் நடந்த பூஜையில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். சூலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கோவில்களில் நடந்த அமாவாசை பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சோமனூர் அடுத்துள்ள வாழைத் தோட்டத்து அய்யன் கோவிலில், பக்தர்கள் பொங்கல் வழிபட, கோவில் ஊழியர்கள் அனுமதி மறுத்தனர். இதனால், பக்தர்கள் ஆவேசமடைந்தனர். பா.ஜ. மற்றும் இந்து இயக்கத்தினர் அங்கு திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.