திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
கொரோனா விதிமுறைகளின்படி பிரம்மோற்சவம் நடத்தப்படுவதால், மாடவீதியில் வாகன சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.அதற்கு பதில் கல்யாண உற்சவ மண்டபத்தில் வாகனத்தின் மீது உற்சவ மூர்த்தியை எழுந்தருளச் செய்ய ஏற்பாடு நடக்கிறது. இந்த வாகன சேவையை தேவஸ்தான தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்ய உள்ளனர்.
பிரம்மோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது. கருடன் உருவம் வரையப்பட்ட கொடி, பெரிய மலர் மாலையில் கட்டப்பட்டு அதை அர்ச்சகர்கள் கொடிமரத்தில் ஏற்றினர். மாலையில் பிரம்மோற்சவத்தின் முதல் வாகன சேவையான பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்பசுவாமி எழுந்தருளினார். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை முழுதும் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. திருமலையைச் சுற்றி, 1,600 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிகாலை 2:00 மணிமுதல், நள்ளிரவு 12:00 மணி வரை மலைப் பாதையில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.