பல்லடம்: முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது, வேதனை அளிப்பதாக காமாட்சிபுரி ஆதீனம் தெரிவித்தார்.
பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில் நடந்த மகாளய அமாவாசை சிறப்பு பூஜையில் பங்கேற்ற அவர் கூறியதாவது: குழந்தை நன்றாக பிறக்கவும், தொழில், வேலை, குடும்ப நலன், நமது விருப்பங்கள் உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே கடவுளிடம் நாம் வேண்டுகிறோம். நல்ல இறப்பு வேண்டிய யாரும் கடவுளை வழிபடுவது இல்லை. ஏனெனில், இறப்பு என்பது மங்களகரமாக இருக்க வேண்டும். அமாவாசை திதி என்பது, ஏழுதலைமுறைகளுக்கான வழிபாடு. சிலர், இதை செய்யாமல் விட்டால் ஏதாவது ஆகிவிடுமோ? என்ற பயத்தினால் மட்டுமே செய்கின்றனர். எண்ணத்தைத் தூய்மையாக வைத்தாள் எண்ணிய காரியம் நிறைவேறும். சிறந்த பக்தி கொண்ட சிவனடியாருக்கும் ஆபத்து வரும். ஆனால், கடவுள் பக்தியால் அவை விலகும். எம பயத்தைப் போக்குவது அமாவாசை வழிபாடு. அப்படிப்பட்ட அமாவாசை நாளில், முன்னோருக்கு திதி கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் நாம் வாழ்ந்தாக வேண்டிய நிலை உள்ளது. திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பார்கள். சிவபெருமான் போல் கண்களை மூடிக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. சவமாகும் உடல் சிவமாக வேண்டும் என்றார்.