பதிவு செய்த நாள்
29
ஜூன்
2012
10:06
சென்னை: கண்டதேவி கோவிலில், தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து, புதிய மனு தாக்கல் செய்ய, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் கண்டதேவி கிராமம் உள்ளது. இங்கு சுவர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குள், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் செல்வது, தேர் இழுப்பது தொடர்பான பிரச்னை குறித்து, 2005ம் ஆண்டு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி வழக்கு தொடுத்திருந்தார். கோவிலுக்குள் ஆதிதிராவிடர்கள் சென்று மற்றவர்களைப் போல் சரிசமமாக கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் தேரை இழுக்க அனுமதிக்கவும், தேரோட்டத்தின் போது ஆதிதிராவிடர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அம்மனுவில் டாக்டர்.கிருஷ்ணசாமி கோரியிருந்தார். இவ்வழக்கில், அப்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, முதல் பெஞ்ச் முன் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இது பழைய வழக்கு என்பதால், தற்போது அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து, புதிதாக மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு, முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.