பதிவு செய்த நாள்
09
அக்
2021
02:10
தளவாய்புரம்: சேத்துார் அடுத்த சொக்கநாதன்புத்துார் மேலுார் துரைச்சாமிபுரம் 13 சமூகத்திற்கு பாத்தியப்பட்ட முப்பிடாதி அம்மன் திருக்கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பூக்குழி திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் பூ இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
புரட்டாசி பொங்கலை முன்னிட்டு, கடந்த 29ல் ஸ்ரீ முப்புடாதி அம்மன், ஸ்ரீ வடகாசி அம்மன், ஸ்ரீ முருகன், வள்ளி தெய்வானை சமேதமாக கோயில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் ஆன்மீக சொற்பொழிவு, மேளக்கச்சேரி, மயில் வாகன அலங்காரம், ரிஷப வாகனம், சிங்க வாகனம், பூ பல்லக்கு பவனி, சிலம்பாட்ட நிகழ்ச்சி, நாதஸ்வர கச்சேரி, திருத்தண்டியல் வீதிஉலா, தட்டி சப்பர வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வாக நேற்று மாலை பூக்குழி திருவிழா நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள் நுாற்றுக்கணக்கானோர் விரதமிருந்து பூ இறங்கி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். ஊர் பொதுமக்களுடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உறவினர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் 13 சமுதாய தலைவர்களும், பொறுப்பாளர்களும் பங்கேற்று விழாவை நடத்தியது அனைவருக்கும் முன்னுதாரணமாக இருந்தது.