பதிவு செய்த நாள்
10
அக்
2021
03:10
சென்னை:கோவில் சொத்து விபரம், வருவாய், வாடகை நிலுவை தொகை, பணியாளர் எண்ணிக்கை, முக்கிய விழாக்கள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய பெயர் பலகை வைக்க வேண்டும், என்று கோவில் நிர்வாக அலுவலர்களுக்கு, அமைச்சர் உத்தரவிட்டார். அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், கோவில்களின் மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள துறை தலைமையகத்தில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் பேசியதாவது:சென்னை மாவட்டத்தில் 1206 கோவில்கள் உள்ளன. சட்டசபை அறிவிப்பில், 100க்கும் மேற்பட்ட திட்டப் பணிகளுக்கு கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவில் திருப்பணிகள், கும்பாபிஷேகம் நடத்த வேண்டிய பணிகளை சிரத்தையுடன் மேற்கொள்ள வேண்டும்.
சென்னையில் சட்டசபை தொகுதி வாரியாக உள்ள கோவில்களின் விபரம் அனைத்தும், ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையாக வழங்கப்பட வேண்டும். மாவட்ட வாரியாகவும் கோவில்களின் முழு விபரங்களை அளிக்க வேண்டும்.போற்றி புத்தகங்கள் முதல் கட்டமாக, 46 கோவில்களில் விற்பனை செய்யப்படும். கோவில் பொறுப்பு அலுவலர்கள்நாள் ஒன்றுக்கு ஒரு கோவில் என, ஆய்வு செய்ய வேண்டும். சொத்து விபரம், வருவாய், வாடகை நிலுவை தொகை, பணியாளர் எண்ணிக்கை, முக்கிய விழாக்கள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய பெயர் பலகையை, கோவில்களில் வெளிப்படையாக வைக்க வேண்டும்.சில கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களை, முக்கிய திருவிழாக்களில் மட்டுமே காண முடிகிறது. மற்ற நாட்களில், உதவியாளரை பணியமர்த்தி உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.பின், நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:சென்னை மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், தனி அலுவலரால் விசாரணை நடந்து வருகிறது. விலை மதிக்க முடியாத சிலைகள், நகைகள் குறித்து கோவில்களின் பதிவேடுகளில் முழுமையான விபரங்கள் உள்ளன. கோவில்களுக்கு சொந்தமான வைப்பு நிதியில் உள்ள தங்கக்கட்டிகள் குறித்த தகவல்கள், விரைவில் வெளியிடப்படும். கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள, குயின்ஸ் லேண்ட் நிறுவனத்திற்கு, நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.அறநிலைய துறை கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.