பதிவு செய்த நாள்
10
அக்
2021
03:10
சென்னை:குலசை முத்தாரம்மன் கோவிலில், வரும் 15 முதல் 17ம் தேதி வரை, பக்தர்கள் தரிசனம் செய்யவும், காணிக்கை செலுத்தவும், சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்துரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் அலுவலகத்திற்கு அவர் அனுப்பியுள்ள மனு:துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில், தசரா திருவிழா, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் பத்து நாட்கள் விரதமிருந்து, தங்கள் வேண்டுதல்படி வேடங்கள் அணிந்து, தர்மம் எடுத்து, கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்துவர்.
இடம் பெயர்ந்த துாத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்கள், சொந்த ஊருக்கு வந்து, குலசை தசரா திருவிழாவில் பங்கேற்பர்.இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக, தென்மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வராமலும், தசரா திருவிழாவில் பங்கேற்காமலும் இருந்தனர். இந்த ஆண்டு அதிக அளவில், சொந்த ஊருக்கு வந்துள்ளனர். அவர்களின் விருப்பம், குலசை முத்தாரம்மனை நேரில் தரிசனம் செய்ய வேண்டும் என்பதே. இச்சூழலில் 15 முதல் 17 வரை, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இதன் காரணமாக, 14 மற்றும் 18ம் தேதி, லட்சக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு செல்லும் நிலை உள்ளது. அவர்கள் ஒரே நாளில் கூடுவதால், கொரோனா பரவக்கூடிய சூழ்நிலை உள்ளது.எனவே, 15, 16, 17ம் தேதிகளிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய, சிறப்பு அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.