பதிவு செய்த நாள்
11
அக்
2021
09:10
அலகாபாத்-இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கடவுள்களான ராமர், கிருஷ்ணருக்கு தேசிய கவுரவம் அளிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என, அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மனு தாக்கல்உத்தர பிரதேசத்தின் சத்ரசைச் சேர்ந்த ஆகாஷ் ஜாதவ் என்பவர், சமூக வலைதளத்தில் ஹிந்துக் கடவுள்களை அவமதித்து பதிவு வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அவர், ஜாமின் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:ஹிந்துக் கடவுள்களான ராமர், கிருஷ்ணர், காப்பியங்களான ராமாயணம், பகவத் கீதை, அவற்றை எழுதிய மகரிஷி வால்மீகி, மகரிஷி வேத வியாசர் ஆகியோர் போற்றப்பட வேண்டும். நம் நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அவர்களுக்கு தேசிய கவுரவம் அளிக்கும் வகையில் பார்லி.,யில் சட்டம் இயற்ற வேண்டும்.இந்திய கலாசாரத்தை குழந்தைகள் தெரிந்து கொள்ளும் வகையில் அவற்றை பள்ளிகளில் பாடங்களாக சேர்க்க வேண்டும்.
விசாரணை: அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், ராமர் நம் கலாசாரத்தின் ஆன்மா; ராமர் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது என கூறியுள்ளது.ஒருவர் நாத்திகராக இருக்க அரசியல் சாசனம் அனுமதி அளிக்கிறது. அதற்காக மதங்களை இழிவுபடுத்த எவருக்கும் அதிகாரம் இல்லை. தான் வாழும் நாட்டின் கலாசாரம், கடவுள்களை மதிக்க வேண்டும். இதுபோன்று அவதுாறாக கருத்து தெரிவிக்கக் கூடாது. மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவிப்போருக்கு எதிராக பல நாடுகளில் கடுமையான தண்டனை வழங்கும் சட்டங்கள் உள்ளன.இந்த வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளவர், 10 மாதங்களாக சிறையில் உள்ளார். ஆனால், வழக்கின் விசாரணை இதுவரை துவங்கவில்லை. அதனால், அவருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.