பதிவு செய்த நாள்
11
அக்
2021
06:10
ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்கு பின், மத்திய தொல்லியல் துறையினர் மீண்டும் அகழாய்வு பணியை துவக்கினர்.
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணிக் கரையில் உள்ள ஆதிச்சநல்லுாரில், ஆங்கிலேயர் காலத்தில், 146 ஆண்டுகளுக்கு முன் அகழாய்வு நடந்துள்ளது. 2004ல் மத்திய தொல்லியல் துறையினர் அகழாய்வு மேற்கொண்டனர்.ஆதிச்சநல்லுாரில் புதிய இடங்களில், தமிழக தொல்லியல் துறையினர் கடந்த இரண்டு ஆண்டு களாக அகழாய்வு செய்தனர்.
2019 மத்திய பட்ஜெட்டில், ஆதிச்சநல்லுாரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதன்படி, மத்திய தொல்லியல் துறையின், திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில் மீண்டும் அகழாய்வு பணிகளை நேற்று துவக்கினர். 17 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் இப்பணி, மூன்று முதல் ஆறு மாதங்கள் நடக்கிறது.வெளிநாடுகளில் உள்ளது போல, இங்கே கிடைத்த தொன்மை பொருட்களின் நிகழ்விட அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட உள்ளது. அகழாய்விற்காக மத்திய அரசு முதற்கட்டமாக, 40 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.தாமிரபரணி கரையில், 36 இடங்கள் தொல்லியல் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. முதற்கட்டமாக கொங்கராயகுறிச்சி, அகரம் ஆகிய வாழ்விட பகுதிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.நேற்று ஆதிச்சநல்லுார் ரயில்வே கேட் அருகே நடந்த அகழாய்வு துவக்க நிகழ்வில், கலெக்டர் செந்தில்ராஜ், எம்.பி., கனிமொழி, எம்.எல்.ஏ., அமிர்தராஜ் பங்கேற்றனர்.