பதிவு செய்த நாள்
12
அக்
2021
04:10
திருப்பதி: திருமலை திருப்பதி கோவிலின் அடிவாரத்தில் உள்ள அலிபிரியில், கோ மந்திர் எனப்படும், பசுவுக்கான சிறப்பு கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார்.திருமலை திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினரும், தமிழகத்தை சேர்ந்தவருமான தொழிலதிபர் ஏ.ஜி.சேகர், 15 கோடி ரூபாய் செலவில், இந்த கோவிலை கட்டி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:நீண்ட நாட்களாக, நான் திருமலை பெருமாள் பக்தன். அவர் என் வாழ்வில் தந்த ஏற்றத்திற்கும் மாற்றத்திற்கும், நான் செலுத்தும் சிறு காணிக்கை தான் இந்தக் கோவில். கோ மந்திர் எனப்படும் பசுவிற்கான கோவிலில், எப்போதும் ஏழு பசுக்கள் இருக்கும். பக்தர்கள் வந்து பசுவையும், பசுவுடன் கூடிய கண்ணனையும் வழிபாடு செய்யலாம்.பசுக்கள் ஒய்வு எடுக்க, மின் விசிறி வசதியுடன் கூடிய அறைகள், ஆரோக்கியமாக உலாவ சிறு புல்வெளி மைதானம் போன்றவைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
கோ துலாபாரமும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. துலாபாரத்தின் ஒரு பக்கம் பசு நிற்க வைக்கப்பட்டு, மறுபக்கம் அதன் எடைக்கு நிகரான பொருட்களை, பக்தர்கள் கோவிலுக்கு வழங்கலாம்.பசுவின் முக்கியத்துவம் மற்றும் அதன் மகத்துவம் குறித்து அறிந்து கொள்ள, இங்குள்ள சிறு அரங்கத்தில் குறும்படம் வெளியிடப்படும். விளக்க கையேடும் கொடுக்கப்படும். கோ மந்திரில் உள்ள பசுவோடு கூடிய கிருஷ்ணன் சிலை, ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. கருங்கற்களால் கோவில் வடிவமைக்கப்பட்டு உள்ளது; இரவு விளக்குகள், மத்திய பிரதேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளன. இதன் நாமம், இரவில் ஒளிரும் தன்மை கொண்டதாகும்.பக்தர்கள் திருமலைக்கு ஏறும் முன்பாக, இங்கே வந்து செல்லலாம். பசுக்களையும் கிருஷ்ணரையும் வணங்கிச் செல்லலாம் வேண்டிக் கொள்ளும் பக்தர்கள், துலாபாரத்தில் நிறுத்தப்படும் பசுவின் எடைக்கு நிகராக, தானியங்கள், வெல்லம், நாணயங்கள் போன்றவைகளை வழங்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.