நவராத்திரியில் இரு தலை, 3 கண்களுடன் பிறந்த கன்று; துர்காவின் அவதாரம் என மக்கள் வழிபடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2021 04:10
புவனேஷ்வர்: ஒடிசாவில் நவராத்திரி தினத்தில் பிறந்த கன்று இரு தலைகள், 3 கண்களுடன் பிறந்துள்ளது. நவராத்திரியில் பிறந்ததால் அப்பகுதி மக்கள் கடவுள் துர்காவின் அவதாரமாக வழிபடத் துவங்கியுள்ளனர்.
உலகில் ஆங்காங்கே சில சம்பவங்கள் வினோதமாகவும், நம்ப முடியாத வகையிலும் தோன்றலாம். அப்படி ஆச்சரியப்படும் வகையில் நடக்கும் சம்பவங்கள் பேசுப்பொருளாகவும் மாறிவிடும். அந்தவகையில், ஒடிசாவில் நவராத்திரி தினத்தில் 2 தலை, 3 கண்களுடன் கன்று பிறந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்குள்ள நப்ரங்க்பூர் மாவட்டம் பிஜப்பூர் கிராமத்தை சேர்ந்த தனிராம் என்ற விவசாயிக்கு சொந்தமான பசு , நவராத்திரி தினத்தில் கன்று ஈன்றுள்ளது. அந்த கன்று இரு தலைகள், மூன்று கண்களுடன் பிறந்ததால் தனிராமின் குடும்பத்தினர் ஆச்சரியமடைந்தனர். இது தொடர்பாக தனிராம் கூறுகையில், ‛இரு தலைகளுடன் பிறந்ததால் கன்றுக்குட்டி தன் தாயிடம் இருந்து பால் குடிப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, வெளியில் இருந்து பால் வாங்கி கன்றுக்கு கொடுத்து வருகிறோம், என்றார். நவராத்திரி தினத்தில் இந்த கன்று அபூர்வமாக பிறந்ததால், அப்பகுதி மக்கள் இதனை கடவுள் துர்கா தேவியின் அவதாரமாக வழிபடத் துவங்கியுள்ளனர்.