பதிவு செய்த நாள்
29
ஜூன்
2012
10:06
ஈரோடு: ஈரோடு கள்ளுக்கடைமேடு காளியம்மன் கோவில் அலுவலகத்துக்கு இரட்டை பூட்டு போடப்பட்டதால், பல மாதமாக தங்க கவசம், வெள்ளிக்கவசம் சாத்தும் நிகழ்ச்சி நடப்பதில்லை. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஈரோடு கள்ளுக்கடைமேட்டில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும், மாசி மாத குண்டத்தில் ஏழாயிரத்துக்கும் மேலான பக்தர்கள் குண்டம் இறங்கி வருகின்றனர். அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கோவிலுக்கு, பரம்பரை டிரஸ்டியாக சண்முகமும், சகுந்தலாவும் இருந்து வந்தனர். 2010 மே, 16ல் சாலை விபத்தில் சண்முகம் இறந்ததால், அவரது மனைவியான தங்காயம்மாளை டிரஸ்டியாக செயல்பட ஆட்சேபமின்மை சான்று பெறப்பட்டது. கள்ளுக்கடைமேடு காளியம்மன் கோவிலுக்கு, 2010 ஜூலை, 1ல் அறங்காவலராக சகுந்தலா பொறுப்பேற்று கொண்டார். இவருக்கு, 2011 ஜூன், 30ம் தேதியோடு, பதவிக்காலம் முடிந்த நிலையில், அறங்காவலர் பொறுப்பை, தங்காயம்மாளிடம் ஒப்படைக்க மறுத்தார். மேலும், கோவில் அலுவலகத்தை பூட்டிய சகுந்தலா, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனிடையே, தங்காயம்மாள் தரப்பினரும், கோவிலுக்கு பூட்டு போட்டனர். இதுவரை கோவில் அலுவலகம் திறக்கப்படாததால், அறநிலையத்துறையின் கீழ் உள்ள காளியம்மன் கோவிலில் ஓராண்டாக தங்க கவசம், வெள்ளிக்கவசம் சாற்றும் நிகழ்ச்சி நடப்பதில்லை. இதனால், ஓராண்டாக அரசுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கோவில் ஊழியர்கள் கூறுகையில், ""பக்தர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப வாரந்தோறும் வெள்ளிக்கிழமையிலும், அமாவாசை, பவுர்ணமி தினத்தில், தங்க கவசம், வெள்ளிக்கவசம் சாற்றப்படுகிறது. தங்க கவசத்துக்கு 1,500 ரூபாயும், வெள்ளிக் கவசத்துக்கு 500 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. பூட்டப்பட்ட கோவில் அலுவலகத்தில் வெள்ளி, தங்க கவசத்துக்கான பொருட்கள் உள்ளதால், இப்பூஜைகள் ஓராண்டாக நடக்கவில்லை. இதனால் அரசுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுவதுடன், வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல், பக்தர்களும் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.