பதிவு செய்த நாள்
12
அக்
2021
04:10
சென்னை: ‛‛விஜயதசமி நாளான வெள்ளிக்கிழமை அன்று, கோவில்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கட்டும், என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‛கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் வகையில், வாரம் தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி விஜயதசமி வருகிறது. நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாள். எனவே, வெள்ளியன்று கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பக்தர்கள் தரிசனத்துக்காக, வெள்ளிக்கிழமை கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டும், எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று (அக்.,12) நடைபெற்றது. அப்போது, அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது என்றும், கொரோனா தொற்றின் பாதிப்புகள் மற்றும் அறிவிப்பட வேண்டிய தளர்வுகள் தொடர்பாக தமிழக முதல்வர் மருத்துவ நிபுணர்களுடன் நாளை (அக்.,13) ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விஜயதசமிக்கு கோவில்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கட்டும் எனக்கூறி, வழக்கை ஒத்தி வைத்தார்.