பதிவு செய்த நாள்
29
ஜூன்
2012
03:06
சுவாமி விவேகானந்தர் தனிமையில் யாத்திரை கிளம்பியது 1891, ஜனவரியில். முதலில் அவர் டில்லி வந்தடைந்தார். சுவாமிஜி அங்கே செல்கிறார் என்பதை அறியாமல், அவர் கிளம்பிய பிறகு புறப்பட்ட குருபாயிக்கள் சிலரும் அங்கேயே வந்து சேர்ந்தனர். ஒரு சுவாமிஜி டில்லிக்கு வந்திருப்பதாகவும், அவரை மக்கள் விவிதிசானந்தர் என்று அழைப்பதாகவும் கேள்விப்பட்ட அவர்கள், அவரைக் காண வந்தனர். என்ன ஆச்சரியம்! அவர்கள் சுவாமிஜியைக் கண்டு பரவசமடைந்தனர். என்னை ஏன் பின் தொடர்ந்தீர்கள்? என்னுடன் யாரும் வரவேண்டாம் எனச்சொல்லியும் என்னை மீறினீர்களே! என கோபப்பட்டார். அவர்கள் இது தற்செயலலாக நடந்தது என்ற தங்கள் விளக்கத்தை தெரிவித்தனர். சுவாமிஜி அவர்களிடம், அப்படியே நடந்திருந்தாலும் பரவாயில்லை. நான் இங்கிருந்து கிளம்புகிறேன். இனியும் பின்னே வராதீர்கள். இது என் கண்டிப்பான உத்தரவு, என்றார். குருபாயிக்கள் அதை ஏற்று சிலநாள் மட்டும் அவருடன் தங்கியிருந்து விட்டு, காஜியாத் என்ற நகரத்துக்கு கிளம்பிவிட்டனர்.
விவேகானந்தர் டில்லியில் சிலநாள் தங்கிவிட்டு, ராஜஸ்தானுக்கு புறப்பட்டார். அவர் இறங்கிய இடம் ஆல்வார் ரயில்வே ஸ்டேஷன். அங்கே குருசரண் லஸ்கர் என்பவர் டாக்டர் தொழில் செய்து வந்தார். அவர் சுவாமிஜியின் தேஜஸ் கண்டு வியந்தார். யாரோ ஒரு மகான் என எண்ணி ஒரு அறையை ஏற்பாடு செய்து தந்தார். சுவாமியை அங்கே தங்க வைத்து விட்டு, தனது இஸ்லாமிய நண்பரை பார்க்கச் சென்றார். அவரிடம், மவுலவி சாஹேப்! ஒரு சாமியார் நம் ஊருக்கு வந்திருக்கிறார். கடைததெருவில் ஒரு அறையெடுத்து தங்க வைத்திருக்கிறேன். அவரைத் தாங்கள் வந்து பார்த்தால் நன்றாயிருக்கும், என்றார். சாஹேப்புக்கு இதுபோன்ற விஷயங்களில் மிகுந்த ஆர்வம். உடனே கிளம்பி விட்டார். அவர்கள் மிக வேகமாக அறையை அடைந்தனர். அங்கே சுவாமிஜி, தன்னிடமிருந்த பொட்டலத்தை பிரித்து பொருட்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். அதில் அப்படி என்ன இருந்தது தெரியுமா? ஒரு கமண்டலம், ஒரு தண்டம், ஒரு கோவணம், இரண்டு காவி உடைகள், பத்து இருபது புத்தகங்கள்...இவ்வளவு தான். சுவாமிஜி அவர்களை இன்முகத்துடன் அறைக்குள் வரச்சொன்னார். சாஹேப் அவருக்கு மிக பணிவுடன் சலாம் சொன்னார்.
அவர்கள் பலவித கருத்துக்களைப் பேசினர். சாஹேபிடம் சுவாமிஜி, உலகிலேயே குர்ஆன் தான் தனிச்சிறப்பு மிக்கது. ஏனெனில் 11 நூற்றாண்டுகளுக்கு முன் அது தோன்றும்போது எப்படிப்பட்ட கருத்துக்களுடன் இருந்ததோ, அதே நிலையில் தான் இன்றும் உள்ளது. அதில் இடைச்செருகல் இல்லாதது மிகப்பெரிய விஷயம். கருத்து செறிவுள்ள தூய்மையான நூல், என்றார். தனது மதநூல் குறித்து சுவாமிஜி இப்படி ஒரு கருத்தைச் சொன்னது சாஹேபிற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. இதன்பின் சாஹேப் தன் முஸ்லிம் நண்பர்கள் அனைவரிடமும் சுவாமிஜியைப் பற்றிச் சொன்னார். டாக்டர் லஸ்கரும் நண்பர்களிடம் சுவாமியைப் பற்றி சொல்லவே, சர்வ மதத்தினரும் அவரைக் காண வந்தனர். சுவாமி அவர்கள் மத்தியில் புத்தர், சங்கரர், குருநானக், கபீர்தாசர், தஜன் குருநாதர் ராமகிருஷ்ணர், ராமானுஜர் என அனைத்து மகான்களின் வரலாறையும் சொற்பொழிவாற்றுவார். அவருக்கு மொழி ஒரு பிரச்னையே அல்ல. உருது, பெங்காலி, இந்தி அத்தனை மொழிகளிலும் வெளுத்துக்கட்டுவார். அந்தந்த மொழிகளில் கீர்த்தனைகளையும் கணீர் குரலுடன் பாடுவார். இப்படி ஆல்வாரில் அவரது ஆன்மிக வாழ்வு அருமையாகப் போய்க் கொண்டிருந்தது.
கூட்டம் அதிகரித்ததால், சுவாமிஜியின் அறை சொற்பொழிவு கேட்க வந்தவர்களுக்கு போதுமானதாக இல்லை. பத்துபேர் அதிகமாக அங்கே அமரலாம். ஆனால், இருபது, முப்பது என்றாகி நூறுபேர் வரை தினமும் வந்த நிலையில், அவரைக் காண வந்தவர்கள் அனைவரும் அவ்வூரில் வசித்த சம்புநாத்ஜி என்ற இன்ஜினியரின் வீட்டில் அவரை தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். சம்புநாத்ஜியும் ஒரு பண்டிதர். ஒரு இளம்துறவிக்கு இத்தனை ஆற்றலா என வியந்து போனார். இங்கு வந்த பிறகு சுவாமிஜி தனது நிகழ்ச்சி நிரலை வகுத்துக் கொண்டார். காலை ஒன்பது மணிவரை அவரைப் பார்க்க யாராலும் முடியாது. ஏனெனில், அதுவரை ஆழ்ந்த தியானத்தில் இருப்பார். அதன்பிறகு, தன்னைக் காண வந்தவர்களை மதியம் இரண்டு மணி வரையிலும் பார்ப்பார். தன்னைப் பார்க்க வருபவர்களிடம், மத வித்தியாசம் பார்க்காதது போல, ஏழை, பணக்காரர் என்ற பாகுபாட்டையோ, படித்தவர், பாமரர் என்ற வித்தியாசத்தையோ அவர் காண்பதில்லை. வந்த எல்லாரிடமும் பேசி விடுவார். சிலர் பாமரத்தனமாகவோ அல்லது விஷமத்தனமாகவோ கூட அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்பார்கள்.
சுவாமி, நீங்கள் பிராமணரா? என ஜாதியைப் பற்றி கேட்டார் ஒருவர். சுவாமிஜி அவரிடம் கோபிக்கவில்லை. தான் பிராமணர் அல்லாதவன் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். அவர் வங்காளத்தின் உயர்பிரிவான தத்தர் (காயஸ்தர் என்றும் சொல்வர்) பிரிவைச் சேர்ந்தவர் என்பது அறிந்த விஷயம் தான். இன்னும் ஒருவர், நீங்கள் ஏன் வெள்ளை உடை அணியக்கூடாது. காவி உடை அணிவது ஏன்? என்றார். அதற்கு சுவாமிஜி, வெள்ளை உடை உடுத்தும் பணக்காரர்கள் நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக என்னையும் கருதி, பிச்சைக்காரர்கள் என்னிடம் கையை நீட்டக்கூடும். அப்போது, அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாமல் மனம் வருத்தப்படும். ஏனெனில், நானே பிச்சைக்காரன். பிச்சை எடுக்கும் துறவிக்கே காவிஉடை உரியது. அதனால் இதை உடுத்துகிறேன், என்றார் பணிவுடன். தன்னை ஒரு பிச்சைக்காரன் என்று தாழ்த்திக் கொண்டதில் சுவாமிஜி வருத்தப்பட்டதே இல்லை. இதனிடையே சாஹேப்புக்கு தன் வீட்டுக்கு சுவாமிஜியை அழைத்துச் செல்ல எண்ணினார். அதே நேரம் ஒரு சந்தேகம். உயர்ந்த மகான் இவர்! நாமோ முஸ்லிம் இனத்தவர். நம் வீட்டுக்கு சாப்பிட அழைத்தால் சுவாமிஜி வருவாரா? ஆச்சார அனுஷ்டானங்கள் கொண்ட இவர், மாமிசம் சாப்பிடும் நம் வீட்டுக்கு வருவாரா? சந்தேகம் கேள்விகளாக விரிந்தது.