பதிவு செய்த நாள்
29
ஜூன்
2012
03:06
அவன் சுவாமிஜியை ஏதும் கேட்காமல், ஒரு மருந்தை தேனில் குழைத்துக் கொடுத்தான். தன்னைப் பற்றி எதுவும் சொல்லாமல், அந்த இடத்தை விட்டு போய்விட்டான். பகவான் தான் சுவாமிஜியை காப்பாற்றியிருக்க வேண்டும் என தோன்றுகிறது. இரண்டு நாளில் சுவாமிஜி எழுந்துவிட்டார். ஆனால், அந்த கடும் காய்ச்சலில் உடல் முழுமையாக இளைத்து எலும்புக்கூடாகி விட்டார். சாதாரணமானவர்கள் என்றால் உயிர் போயிருக்கும். எதையும் தாங்கும் இரும்பு இதயமுடையவர் என்பதாலும், உலகத்திற்கு அவரது சேவை இப்போது தான் துவங்கியிருப்பதாலும் இறைவன் அவரைக் காப்பாற்றி விட்டான். இனியும் அங்கிருக்கக்கூடாது என்று எண்ணி, ரிஷிகேசத்தில் இருந்து மீரட் நோக்கி சுவாமியும், சீடர்களும் திரும்பினர். மீரட்டில் மற்றொரு குருபாயியான அகண்டானந்தர் நோய்வாய்ப்பட்டு, டாக்டர் த்ரைலோக்கியநாதர் என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார். அவர் சுவாமிஜியைக் கண்டதும் கண்ணீர் வடித்தார். சுவாமிஜி! நீங்களா...அடையாளம் தெரியாமல் இளைத்துப்போய் விட்டீர்களே! என்றார்.
சுவாமிஜியை பார்த்ததில் இருந்து அவரது உடல் தேற ஆரம்பித்து விட்டது. விவேகானந்தரும் அங்கு 15 நாட்கள் வரை தங்கி தொடர் சிகிச்சை எடுத்து ஓரளவு உடல் பலம் பெற்றார். மீரட்டில் சேட்ஜி என்பவர் தனது தோட்டத்தில் சுவாமியும், சீடர்களும் தங்க இடம் கொடுத்தார். அங்கே தங்கியிருந்த போது, சுவாமிஜி ஏராளமான புராணங்கள், இலக்கியங்களையும் பற்றி குருபாயிக்களுக்கு போதித்தார். சுவாமிக்கு மிருச்சகடிகை என்ற சமஸ்கிருத நூலும், காளிதாசரின் சகுந்தலை நாடகமும் மிகவும் பிரியமானவை. இவற்றை முடித்த பின்பு, குமார சம்பவம் மற்றும் விஷ்ணு புராணத்தை அவர்களுக்கு விளக்கினார். ஆன்மித்துடனும் இலக்கிய மழையிலும் குருபாயிக்கள் நனைந்தனர். அகண்டானந்தர் மீரட்டிலுள்ள நூலகத்தில் இருந்து புத்தகங்களை எடுத்து வருவார். சுவாமிஜியின் ஆங்கில அறிவு உலகறிந்த விஷயம். சர் ஜான் லுப்பக் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் எழுதிய பல புத்தகங்களை அகண்டானந்தர் கொண்டு வந்தார். அத்தனையையும் ஒரே நாளில் படித்து விட்ட சுவாமிஜி, அன்று மாலையே அதை நூலகத்தில் ஒப்படைக்கச் சொல்லி அனுப்பி விட்டார்.
நூலக அதிகாரி அதைக் கொண்டு சென்ற அகண்டானந்தரிடம், சுவாமி! இத்தனை புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு போவானேன்! உடனே கொண்டு வந்து தருவானேன்! என்று குரலில் கேலி தொனிக்க கேட்டார். கேட்டவர் படித்து முடித்துவிட்டார். மற்றவர்கள் படிக்க உதவட்டுமே என்று கொண்டு வந்துவிட்டேன், என்ற அகண்டானந்தரை அதிகாரி நம்பவில்லை. இதைக் கேள்விப்பட்ட விவேகானந்தர் நூலகத்துக்கே வந்துவிட்டார். அதிகாரியிடம், ஐயா! தங்கள் நேரத்தை வீணடித்து விட்டதாகவும், புத்தகங்களை படிக்காமலே உங்களிடம் ஒப்படைத்து விட்டதாகவும் என் சீடரிடம் தாங்கள் சொல்லியுள்ளீர்கள். உங்கள் கருத்து தவறானது. ஒரேநாளில் இவற்றை படிக்க முடியாது என்று அவ்வளவு உறுதியாக எப்படி சொல்கிறீர்கள்? நீங்கள் இந்தப் புத்தகங்களில் எந்தப் பகுதியில் இருந்து வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள். நீங்கள் கேட்டு சொல்லாவிட்டால், நான் இனி இந்த நூலகத்தில் புத்தகங்களையே எடுக்கமாட்டேன், என்றார் ஆணித்தரமாக. நீங்கள் இப்படி அடித்துப் பேசுவதால், நான் நம்பி விட வேண்டுமா! என்ற நூலகர், அவரிடம் பல கேள்விகளைக் கேட்டார். எல்லாவற்றுக்கும் பதில் டாண் டாண் என வெளிப்படவே, கலங்கிவிட்டார் அந்த அதிகாரி.
சுவாமிஜி! நான் உண்மையிலேயே பேராச்சரியம் அடைகிறேன். இதற்கு மேல் என்ன சொல்வேன், என்று மன்னிப்பு கேட்கும் தொனியில் கூற, சுவாமிஜி அங்கிருந்து புறப்பட்டார். அகண்டானந்தருக்கும் இந்த சந்தேகம் இருந்தது. அவர், சுவாமி, ஒரே நாளில் இதை எப்படி படித்து முடித்தீர்கள்? அதன் ரகசியம் தான் என்ன? என்றார் ஆவலை முழுமையாக வெளிக்காட்டியவராய். அகண்டா! இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. முடியாதது என்ற ஒன்று இவ்வுலகில் இல்லை. முடியாது என்ற வார்த்தையை உபயோகிப்பவர்களால் இவ்வுலகில் ஏதும் சாதிக்க முடியாது. அதிலும், ஆன்மிக சாதனையாளன் ஒருவன் முடியாது என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால், அவனால் தியானம் கூட செய்ய முடியாதே! இதில் ரகசியம் ஏதுமில்லை. வரிவரியாக படித்தால் நேரமாகும். நான் பாரா பாராவாக படிப்பேன். அதன் முதல் வரியையும், கடைசி வரியையும் படித்தாலே, உள்ளே இன்னதான் இருக்கும் என்பதை ஊகித்து விடுவேன். விஷயம் முடிந்தது, என்றார்.
சுவாமிஜியின் வாழ்வில் நடந்த இந்த சம்பவம், மாணவர்களுக்கு ஒரு பாடம். இன்றைய மாணவர்கள் பத்து இருபது பாடங்களைப் படிப்பதற்குள் திணறி விடுகிறார்கள். பாடங்களை நீக்க வேண்டும் என குரல் கொடுக்கிறார்கள். சுமை எவ்வளவு என்பது முக்கியமல்ல. சுமையைத் தாங்கும் பயிற்சி மிகவும் அவசியம். விவேகானந்தரின் வாழ்வில் இருந்து மாணவர்கள் இதைக்கற்றுக் கொள்ள வேண்டும். இனிதான், சுவாமிஜியின் தனிமை பயணம் ஆரம்பமாகப் போகிறது. எந்த ரிஷிகேசத்தில் இருந்தபோது, உடல் மெலிந்து சிரமப்பட்டு திரும்பினாரோ அந்த இடத்தின் நினைவு மீண்டும் சுவாமிஜியின் மனதில் நிழலாடியது. ஆனால், இம்முறை யாரும் இல்லாமல் தனியாகப் போக வேண்டும். அங்கிருக்கும் நிர்வாண சுவாமியார்களுடன் தங்க வேண்டும். அவர்களைப் பார்த்தே மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என சுவாமிஜி விரும்பினார். குருபாயிக்களிடம் தன் விருப்பத்தைச் சொன்னார். அதிர்ந்து போன அகண்டானந்தர், தான் மட்டுமாவது கூட வருவேன் என அடம்பிடித்தார். யார் வந்தாலும், எனக்கு சுமை, என்னால் உங்களுக்கு சுமை என்ற சுவாமிஜி, நீங்கள் அவரவர் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் சென்று இந்த தேசத்துக்கு தேவையான கருத்துக்களைப் பரப்புங்கள் என சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.