பதிவு செய்த நாள்
29
ஜூன்
2012
03:06
மவுல்வி சாஹேப் தன் முயற்சியை செயல்படுத்தி பார்க்க எண்ணினார். சுவாமிஜி தங்கியிருந்த சம்புநாத்ஜியின் வீட்டிற்கு சென்றார். சம்புநாத்ஜியும் பெரிய பண்டிதர். அவரைச் சந்தித்த சாஹேப், ஜி! எனக்கு ஒரு ஆசை. என் வீட்டில் பாபாஜி (விவேகானந்தரை இப்படித்தான் அழைப்பார்கள் மக்கள்) ஒரு நாளேனும், பிøக்ஷ ஏற்க வரவேண்டும். அதற்கு தாங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும். அவர் வருவாரோ என்று தயக்கமாக இருக்கிறது. நான் முஸ்லிம் ஆயிற்றே, என்றார். மவுல்வியை சம்புநாத்ஜி ஆச்சரியத்துடன் பார்த்தார். அவரது பார்வைக்கு என்ன பொருள் என உணரமுடியாத சாஹேப்,ஜி! என் வீட்டிற்கு பிராமணர்களை வரவழைத்து சுவாமிஜி விருந்துண்ணும் இடத்தை சுத்தம் செய்து வைக்கிறேன். பிராமணர்களின் வீட்டில் இருந்தே பாத்திரங்களை வரவழைத்து, அவர்கள் கையாலேயே சமைக்கச்செய்கிறேன். நானோ, என் வீட்டாரோ அவரருகில் நிற்க மாட்டோம். அவர் சாப்பிடுவதை தூரத்தில் இருந்து காணும் பாக்கியம் கிடைத்தாலே போதும், என்றார் நா தழுதழுக்க.
சம்புநாத்ஜி நெகிழ்ந்து போனார். சாஹேப், நானும் பிராமணன் தான். இவ்வளவு சுத்தமாக விருந்தளிக்கிறீர் என்றால், அந்த விருந்தில் நானும் பங்கேற்கிறேன், என்றார் உணர்ச்சி பொங்க. சுவாமிஜியிடம் சம்புநாத்ஜி இதைத் தெரிவிக்கவும், எந்த வித தயக்கமும் இன்றி கிளம்பிவிட்டார் விவேகானந்தர். நான் ஒரு துறவி, மதங்களை விட மனிதர்களே எனக்கு முக்கியம் என்றார். சாஹேப்பின் வீட்டில் சுவாமி பிøக்ஷ ஏற்ற பிறகு, இன்னும் சில இஸ்லாமிய பிரமுகர்களும் சுவாமிஜியை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். ஆல்வாரில் சுவாமி தங்கியிருந்தது பற்றியும், அவரது ஆங்கில அறிவு பற்றியும் அவ்வூர் மகாராஜா மங்களசிங்ஜியின் திவானான மேஜர் ராமச்சந்திரஜி கேள்விப்பட்டார். மங்களசிங்ஜிக்கு ஆங்கிலேயர்களுடன் உறவாடுவதிலும், உரையாடுவதிலும், அவர்களுடன் சேர்ந்து வேட்டையாடுவதிலும் மிகுந்த விருப்பம். ஆங்கிலேயர்களுக்கு சமமாக அவர்களுடன் ஆங்கிலத்தில் பேசுவார். இதன் காரணமாக இந்திய நாகரிகத்தில் இருந்து திசைமாறி, ஐரோப்பிய பழக்க வழக்கங்களில் அவர் ஊறிக்கிடந்தார். அது மட்டுமல்ல, ஐரோப்பிய கலாச்சாரத்தின் விளைவாக, நம்மூர் சிலை வழிபாட்டையும் கைவிட்டார் மகாராஜா.
திவானுக்கு மகாராஜாவின் இந்தப் போக்கில் சற்று அதிருப்தி உண்டு. விவேகானந்தரும் ஆங்கிலம் அறிந்தவர் என்பதால், அவரை மகாராஜாவிடம் பேச வைத்தால் நன்றாக இருக்கும். ஒருவேளை மகா ராஜாவின் போக்கில் மாற்றம் ஏற்படக்கூடும் என்று அனுமானித்தார் திவான். யாரை எங்கே தட்டினால் கீழே விழுவார்கள் என்ற கலை சிலருக்கு மட்டுமே வரும். திவான் அந்தக்கலையில் வல்லவர். ஒரு துறவி வந்திருக்கிறார். அவருக்கு சமூகம் பேட்டி தர வேண்டும் என்றார் மகாராஜா சம்மதிக்கமாட்டார். எனவே, ஆங்கிலம் அறிந்த துறவி வந்திருக்கிறார் என்றால், ராஜா உடனே சம்மதிப்பார் என கணக்குப் போட்டு, மகாராஜாவுக்கு கடிதம் வைத்தார். மங்களசிங்கும் உடனே ஒப்புக்கொண்டார். திவானின் இல்லத்துக்கு சுவாமிஜியை அழைத்து வந்தனர். மகாராஜாவும் அங்கேயே வந்து விட்டார். சுற்றிலும் முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்தனர். விவேகானந்தர் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்தார். மகாராஜாவைக் கண்டதும் மரியாதை நிமித்தமாக எழ முயலவும், மகாராஜா அதைத் தடுத்து விட்டார்.
எனக்காக தாங்கள் எழக்கூடாது, என்றார் பணிவு பொங்க. என்ன தான் மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறிப்போயிருந்தாலும், ஒரு துறவிக்குரிய மரியாதையைக் கொடுக்க மன்னர் மறக்கவில்லை. விவேகானந்தரிடம், சுவாமிஜி! தாங்கள் மிகச்சிறந்த பண்டிதர் என அறிந்தேன். பலமொழிகள் தெரிந்தவராம். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவீர்கள் என்றார்கள். படித்து பட்டம் பெற்ற நீங்கள், மிகப்பெரிய பணிக்கு சென்று, ஏராளமாக பணம் ஈட்டுவது எளிதான காரியமாய் இருந்தும் கூட, பிøக்ஷ எடுக்கும் துறவியாய் அலையும் காரணத்தை அறியலாமா? என்றார். விவேகானந்தர் இந்த கேள்விக்கு பதிலளிக்காமல், எதிர்க்கேள்வி ஒன்றைப் போட்டார். அதிருக்கட்டும் மகாராஜா! நீங்கள் அரசாங்கத்தை கவனிப்பதை மறந்து விட்டு, எந்நேரமும் ஆங்கிலேயர்களுடன் சுற்றுகிறீர்களாமே! அது ஏன்? என்றார் மிகத் தைரியமாக. சுற்றியிருந்த ராஜாங்க நிர்வாகஸ்தர்கள் கலங்கி விட்டார்கள். அந்தத் துறவி இப்படி ஒரு வில்லங்கமான எதிர்க்கேள்வி கேட்டதற்காக, மகாராஜா அவரைத் தொலைத்துக் கட்டி விடுவார் என்றெண்ணி, கலக்கத்தில் இருந்தனர். திவானுக்கோ, இவரை ஏன் கூட்டி வந்தோம் என்றாகி விட்டது.
ஆனால், அனைவரின் எதிர்பார்ப்புக்கும் மாறாக சாந்தமாக இருந்த மங்களசிங் மகாராஜா, அது எனக்கு பிடித்திருக்கிறது. அதனால், அப்படி செய்கிறேன், என்றார். உடனே விவேகானந்தர், உங்களுக்கு எப்படி அது பிடித்திருக்கிறதோ, அதேபோல் இந்த துறவறம் எனக்கு பிடித்திருக்கிறது, என்றார். அடுத்து சுவாமிஜியின் மத உணர்வைப் புண்படுத்தும் வகையிலும், தான் ஒரு ராஜாங்கத் தலைவர் என்ற ஆணவத்திலும், மகாராஜா அடுத்த கேள்வியை வீசினார். ஜி! எனக்கு கடவுள் இதெல்லாம் பிடிக்காது. ஒரு உயிரற்ற மரத்திலும், உலோகத்திலும் செய்த விக்ரகத்தை வணங்குவதால் என்ன பலன் கிடைத்து விடப் போகிறது? ஒருவேளை இப்படி நான் கடவுளுக்கு எதிராகப் பேசுவதால் என் விதி என்னாகுமோ? என்றார் பரிகாசம் தொனிக்க. சுவாமிஜிக்கு முகம் மாறுபட்டது. ஒவ்வொரு மதத்திற்கும் ஒவவொரு கொள்கை. இந்துமதம் விக்ரக ஆராதனையை வலியுறுத்துகிறது. அதை அனுசரித்து செல்வது தான் உங்களுக்கு நல்லது என்று பட்டும் படாமலும் ஒரு பதிலைச் சொன்னார். இந்த பதில் சுற்றியிருந்தவர்களுக்கு அவ்வளவு திருப்தியைத் தரவில்லை. விக்ரக ஆராதனை பற்றி மகாராஜாவுக்கு இவர் தெளிவாக எடுத்துச் சொல்வார் என எதிர்பார்த்தோம். நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகி விட்டதே என நினைத்தனர். சுவாமிஜி அவர்களின் முகக்குறிப்பை உணர்ந்து கொண்டார். சுவரில் மாட்டியிருந்த ஒரு படத்தைக் காட்டி, இது யாருடைய படம்?என்றார். இது மகாராஜாவின் ஓவியம் என்றார் திவான். அப்படியா...இந்த படத்தின் மீது காறித் துப்புங்கள், என்றார் சுவாமிஜி. திவான் மட்டுமல்ல... அங்கு கூடியிருந்த எல்லோருமே திக்பிரமையில் ஆழ்ந்து விட்டனர்.