திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஊரல் காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தவபுத்திரன் 45; வழக்கறிஞர். இவர் அக்.,15ம் தேதி வீடு கட்டுவதற்காக ஜே.சி.பி. மூலம் பள்ளம் தோண்டினார்.
அப்போது பூமிக்கு அடியில் இருந்து கருங்கற்களால் ஆன ஒரு அடி உயரமுள்ள அம்மன், அப்பர் சிலைகள் 2 என 3 சிலைகள்கிடைத்தது. சிலைகளைதவபுத்திரன் தனது நிலத்தில் வைத்திருந்தார்.இது குறித்து நேற்று இரவு 8:00 மணிக்கு வருவாய்த்துறை மற்றும் ரோஷணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உடன் சம்பவ இடத்திற்குபோலீசார் மற்றும் தாசில்தார் செல்வம் கிராம நிர்வாக அலுவலர் பிரியமித்திரை ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.பின் 3 சிலைகளையும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டு திண்டிவனம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து தாசில்தார் கூறுகையில் வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது 3 சிலைகள் கிடைத்துள்ளது. சிலைகளை யாரிடம் ஒப்படைப்பது என தெரியாமல் வைத்திருந்தனர்.தகவல் அறிந்து அம்மன்,2 அப்பர் சிலைகளை மீட்டு வந்தோம். 3 சிலைகளும் ஒரு அடி உயரம் உள்ளது. இருப்பினும் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகே என்னென்ன சிலை மற்றும் எந்த காலத்தினுடையது என்பது தெரியவரும் என்றார்.