பதிவு செய்த நாள்
20
அக்
2021
04:10
தஞ்சாவூர்: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு, 750 கிலோ அரிசி, 600 கிலோ காய்கறி, இனிப்பு வகையால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது.
தஞ்சாவூர் பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் உலகிலேயே மிகப் பெரியதாகும். ஆறடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இத்தகையை சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடை பெறுவது வழக்கம். இந்தாண்டு பக்தர்களால், 750 கிலோ பச்சரிசி, 600 கிலோ காய்கள், இனிப்பு வகைகள் வழங்கப்பட்டன. பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர், லிங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள அன்னம், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாகப் போடப்பட்டது.