பதிவு செய்த நாள்
20
அக்
2021
05:10
யதாத்ரி: தெலுங்கானாவில் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் , 1,000 ஆண்டுகள் பழமையான லட்சுமி குடைவரை கோவில் புனரமைப்பு பணிகளை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பார்வையிட்டு ஒரு கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார். ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலை கோவில், உலக பிரசித்தி பெற்றது. தெலுங்கானாவிலும், அதேபோன்ற ஒரு கோவிலை கட்டமைக்கவேண்டும் என்ற, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் விருப்பம். இதற்காக தெலுங்கானாவின் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில், லட்சுமி நரசிம்மரின் குடைவரை கோவில் உள்ளது. தலைநகர் ஐதராபாதில் இருந்து, 70 கி.மீ., தொலைவில், குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவில், மிகவும் பிரமாண்டமான முறையில் புனரமைக்கப்பட்டு வருகிறது.
2016ல் துவங்கப்பட்ட, இந்த கோவில் புனரமைப்பு பணிக்கு, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வைணவத் திருக்கோவிலை புனரமைக்கும் பணிகளில், இரவு பகல் பாராமல், நுாற்றுக்கணக்கான சிற்பிகளும், கலைஞர்களும் ஈடுபட்டு வருகின்றனர். பொறியாளர்கள், பொதுத் துறை அதிகாரிகளும், இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதான ராஜ கோபுரம், 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுஉள்ளது. இதேபோல், யாத்ரீகர்கள் தங்குவதற்கான, காட்டேஜ்கள், கார் நிறுத்துவதற்கான வசதி, கோவில் குருக்களுக்கான வீடுகள் உள்ளிட்டவற்றை கட்டமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்த கோவிலுக்கு வந்த முதல்வர் சந்திர சேகர ராவ், சுமார் 7 மணி நேரம் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: கோயில் புனரமைப்பு பணிகள் முடிந்து 2022 மார்ச் 28 ம் தேதி முதல் பக்தர்கள் வழிபாட்டிற்கு திறந்து வைக்கப்படும். கோயில் திறப்பதற்கு ஒரு வாரம் முன்னர், சின்ன ஜீயர் தலைமையில் 1000 புரோகிதர்கள் இணைந்து சுதர்சன மகா யாகம் மற்றும் சடங்குகளை செய்வார்கள். கோயில் திறப்பு விழாவில் அன்று நாட்டில் முக்கிய கோயிலில் இருந்து 6000 புரோகிதர்கள் மற்றும் 4,000 அர்ச்சகர்கள் இணைந்து மதச்சடங்குகளை செய்வார்கள்.
திருப்பதி திருமலை கோவிலை போல், இந்த கோவிலிலும் விமான கோபுரத்தில் பொருத்துவதற்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசு தங்கம் வாங்கும். கோவில் பணிகளுக்கு அதிகளவு தங்கம் தேவைப்படுவதால், தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து நன்கொடையாக பெற்று கொள்ள முடிவு செய்துள்ளோம். நன்கொடை எவ்வளவு குறைவானதாக இருந்தாலும் அதனை பெற்று கொள்வோம். அனைவருக்கும், யதாத்ரி கோவில், தங்களின் கோவில் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். மொத்தமுள்ள 250 ஏக்கர் கோவில் நிலத்தில், 50 ஏக்கர் பசுமையாக இருக்கும் எஞ்சியுள்ள 200 ஏக்கரில் குடியிருப்புகள் கட்டப்படும். ஒவ்வொரு குடியிருப்பிலும் 4 மாடிகளுடன் மொத்தம் ஆயிரம் பேர் குடியிருக்கும் வகையில் ஏற்படுத்தப்படும். சம்பந்தப்பட்ட குடியிருப்புகளுக்கு நன்கொடை மற்றும் விளம்பரதாரர்களை யதாத்ரி கோயில் வளர்ச்சி ஆணையம் ஏற்று கொள்ளும். ஏராளமான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், தொழிலதிபர்கள் கோவிலுக்கு தங்கம் நன்கொடை வழங்க முன்வந்துள்ளனர். செவ்லா எம்.பி., ரஞ்சித் ரெட்டி, எம்.எல்.சி.,க்களான நவீன்குமார், சம்பிபூர் ராஜூ, எம்.எல்.ஏ.,க்களான காந்தி, ஹன்மத் ராவ், கிருஷ்ணா ராவ், விவேக் ஆனந்த் ஆகியோர் தலா ஒரு கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்க முன் வந்துள்ளனர். இவ்வாறு முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.