சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் பார்வைக்காக திருக்குளத்தின் சிறப்பு மற்றும் வரலாறு குறித்த அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டு உள்ளது. அதில், குளமானது, 800 ஆண்டு பழமையானது. 77 அடி நீள அகலத்தில் சதுர வடிவில் அமைந்துள்ளது. கோவிலின் முக்கிய விழாவான வைகாசி பெருவிழா உற்சவத்தின் போது தீர்த்தவாரி நடக்கும். அப்போது உற்சவ மூர்த்தி சோமாஸ்கந்தர் குளத்தின் முன்பாக எழுந்தருளி தீர்த்தவாரியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நீர் குறையாமல் நிரப்பிடும் வகையில் குளத்திற்குள் ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. நீரிலுள்ள பிராணவாயு குறையாமல் புதிய நீர் ஊரும் வகையில், தேங்கி நிற்கும் நீரினை இறைப்பு இயந்திரம் மூலமாக அவ்வப்போது வெளியேற்றப்படுகிறது. இதனால் குளத்தில் பாசி மற்றும் மாசுபடுதல் தவிர்க்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.