எஸ்.புதூர்: சிங்கம்புணரி அருகே மிலாடி நபியை முன்னிட்டு மதநல்லிணக்க கந்தூரி விழா நடந்தது. எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டியில் ஆண்டுதோறும் மிலாடி நபி தினத்தை மதநல்லிணக்க விழாவாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் நேற்று கரிசல்பட்டி பள்ளிவாசலில் ஜமாத் கமிட்டி சார்பில் இவ்விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து சமுதாயத்தை சேர்ந்த 450 க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு தனித்தனியாக கந்தூரி உணவு பிரித்துக் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து நாட்டு மக்களுக்கு நன்மை வேண்டியும் கொரோனா மற்றும் இயற்கை சீற்றத்திலிருந்து பாதுகாக்க வேண்டியும் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. இரவு அனைத்து தரப்பினருக்கும் அன்னதான விருந்து வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கரிசல்பட்டி ஜாமியா பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி நிர்வாகிகளும் இளைஞர் அணியினரும் ஊர் முக்கிய பிரமுகர்களும் செய்திருந்தனர்.