பதிவு செய்த நாள்
29
ஜூன்
2012
05:06
இருப்பினும் சுவாமி நீண்ட தூரம் நடந்தார். யாரிடமும் பதில் கிடைக்கவில்லை. ஓரிடத்தில் அமர்ந்த அவர், இறைவா ! உன் விருப்பம் எதுவோ அது நடக்கட்டும், என்று சொன்னார். இறைவன் அவரைக் கைவிடுவானா என்ன! அவர் அமர்ந்திருந்த இடத்தின் எதிர்வீட்டில் இருந்த பெண்மணி அவரைக் கவனித்தார். சுவாமியின் தேஜஸ் அந்த அம்மையாரைக் கவர்ந்து விட்டது. அவர், அவ்வூரில் மிக செல்வாக்காக விளங்கிய ஹேல் என்பவரின் மனைவி. திருமதி ஹேல் அவர் இருந்த இடத்திற்கே வந்து அவரைப் பற்றி விசாரித்தார். சுவாமியின் அசத்தலான ஆங்கிலம் அவரை மிகவும் கவர்ந்தது. அவரை தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்று, வந்த விஷயத்தை அறிந்து கொண்டார். அடுத்து சாப்பிடச் சொன்னார். சுவாமிஜிக்கு தெளிவு பிறந்தது. அடுத்து ஹேல் சொன்ன ஒரு செய்தி அவரை ஆச்சரியப்பட வைத்தது. மிஸ்டர் விவேகானந்தா ! சர்வமத மகாசபையின் தலைவர் டாக்டர் பர்ரோஸ் எங்களுக்கு மிகவும் வேண்டியவர். என்கணவர் இவ்வூர் வி.ஐ.பி. என்பதால், நாங்கள் சொல்வதை நிச்சயம் கேட்பார். மேலும் பேராசிரியர் ரைட் உங்களைப் பற்றி அவருக்கு எழுதியிருப்பதாக வேறு சொல்கிறீர்கள். எனவே உங்களுக்கு சர்வமத மகாசபையில் பேசுவதற்கு அனுமதி கிடைத்துவிடும் என்றே கருதுகிறேன், என்றார்.
திருமதி ஹேலை நன்றியுடன் பார்த்தார் விவேகானந்தர். அந்த அம்மையார் சொன்னதுடன் நிற்கவில்லை. சர்வமத மகாசபைக்கு அழைத்துச் சென்று, பர்ரோஸை சந்தித்து அனுமதியும் பெற்றுக் கொடுத்து விட்டார். சுவாமிஜிக்கு பேச்சாளர்கள் தங்குமிடத்தில் இடமும் ஒதுக்கப்பட்டு, கூட்டம் நடக்கும் வரை உணவு முதலான சகல சவுகரியங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. தனது குரு ராமகிருஷ்ணருக்கும், தாய் சாரதாதேவிக்கும் அவர் மானசீகமான வணக்கத்தை தெரிவித்தார். 1893 செப்டம்பர் 11, கூட்டநாளும் வந்து விட்டது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 400 வது ஆண்டு விழா அமெரிக்காவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தவேளை. அந்த விழாவின் ஒரு பகுதியாக சர்வமத மகாசபை கூட்டத்தையும் சேர்த்துக் கொண்டனர். கூட்டத்தை நடத்தியவர்களுக்கு, கிறிஸ்தவ மதத்தின் சிறப்பு மற்ற மதங்களை விட உயர்ந்ததாக இருக்கும் வகையில் அம்மதத்தின் சார்பில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளை பேசுவர் என்ற நம்பிக்கை இருந்தது. இதன்மூலம் கிறிஸ்தவ மதமே உலகில் உயர்ந்தது என எடுத்துக்காட்ட வேண்டும் என ஆவல் கொண்டிருந்தனர். இந்து, இஸ்லாம், ஜைனம், பௌத்தம், ஜூடாஸ், மஜ்டா, ஷின்டோ என எட்டு மதங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
காலை 10 மணி, கூட்டம் நடக்க இருந்த சிகாகோ கொலம்பஸ் ஹால் நிரம்பி வழிந்தது. கூட்டம் ஆரம்பிக்க அறிகுறியாக மிகப்பெரிய மணியின் ஒலி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அன்றைய உலக மக்கள் தொகை 120 கோடி. அத்தனை நாடுகளும் தங்கள் மதமே உயர்ந்ததென நிரூபிக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு, அந்த கூட்டம் தொடர்பான செய்திகளைக் கேட்க ஆவலாயிருந்தன. இன்றுபோல் வசதி இருந்தால், இதை லைவ்டெலிகாஸ்ட் ஆக காட்டியிருப்பார்கள். அத்தனை எதிர்பார்ப்பு ! அந்த அரங்கில் கூடியிருந்தவர்கள் 1 ஆயிரம் பேர். பிரதிநிகள் மேடையில் ஏறினர். ஒரு மதத்திற்கு மூன்று முதல் 5 பேர் வரை கலந்து கொண்டனர். அவரவர் மத சின்னங்களை அணிந்து வந்திருந்தனர். கத்தோலிக்க கிறிஸ்தவ முக்கிய பாதிரியார் கிறிஸ்தவ முக்கிய பாதிரியார் கார்டினல் கிப்பன்ஸ் நடுவில் அமர மற்ற பிரதிநிதிகள் இருபுறமும் அமர்ந்தனர். விவேகானந்தர் 31வது நபராக அமர்ந்திருந்தார். அவர் சுற்று முற்றும் பார்த்தார். இவ்வளவு பெரிய கூட்டம்... நமது பேச்சு எந்தளவுக்கு எடுபடும் ! இங்கே வந்திருக்கும் அனைவரும், வயதில மூத்தவர்கள்.
உலக மதங்களைக் கரைத்துக் குடித்தவர்கள். நம் பேச்சு எடுபடுமா ? மேலும், எல்லோரும் கையில் குறிப்பு புத்தகம் வைத்துள்ளார்கள். நாம் எதுவுமே அப்படி படித்தோ, எழுதியோ வரவில்லையே ! என்னாகுமோ ! எதற்கும் கலங்காத அவரது மனம் கூட சிறிது சஞ்சலப்பட்டது. அதே நேரம் இவ்வளவு பெரியவர்கள் மத்தியில் 30 வயது இளைஞனான நானும் இடம்பெற்றிருக்கிறேன் என்றால் அது பெருமை தானே ! என்ற எண்ணம் உத்வேகத்தையும் தந்தது. சுவாமிஜியை சபைத்தலைவர் பேச அழைத்தார். சுவாமிஜி, இன்னும் சிலர் பேசட்டுமே என்று கைஜாடை காட்டி மேடையிலேயே அமர்ந்திருந்தார். இப்படியாக சிலர் பேசிமுடிக்க, ஒரு வழியாக தன்னைத் திடப்படுத்தி கொண்டு, மேடையில் ஏறினார். யுகயுகமாக பல கல்பங்களாக இந்த பூமியில் விளங்கி வரும் இந்து மதத்தின் சாரதியான சுவாமி விவேகானந்தர் ஆரம்பித்தார் கணீரென்ற குரலில். என் அன்புக்குரிய அமெரிக்க சகோதர சகோதரிகளே என்று. அதுவரை பேசியவர்களின் பேச்சுக்கு பேச்சின் முடிவில் சம்பிரதாயத்துக்காக கைதட்டிய அரங்கத்தினர். இப்போது விண்ணெட்டும் அளவுக்கு கரகேஷம் செய்தனர்.
அந்த இளம் துறவி, மாற்றுமதத்தை சேர்ந்தவராயினும், எல்லா உயிர்களையும் தன் சொந்த சகோதர சகோதரிகளாக பாவித்தது பற்றி அவர்கள் அடைந்த மகிழ்ச்சியின் எதிரொலியே இந்த கைத்தட்டல். இந்த ஒரு வார்த்தையிலேயே அவர் அமெரிக்க மக்களின் இதயங்களை வென்று விட்டார். எல்லா உயிர்களையும் தன் சொந்த பிறப்பாகவும் கருத வேண்டும் என வலியுறுத்துவது இந்த பிரபஞ்சத்தில் இந்து மதம் தவிர வேறு எதுவாக இருக்க முடியும் என்றதொணியின் அவரது பேச்சு துவங்கியது. அதுவரை பேசியவர்கள் லேடீஸ் அன்ட் ஜென்டில்மென் என்று தான் பல்லவி பாடியிருந்தனர். ஆனால் டியர் அமெரிக்கன் பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ் என்ற வார்த்தை அவர்களின் உள்ளத்தை நெகிழ்த்தி விட்டது. கிட்டத்தட்ட ஒரு நிமிடம் 40 செகன்ட் (100 விநாடிகள்) ஆனது கரகோஷமும் ஆராவாரமும் அடங்க ! இன்னும் சிலர் உணர்ச்சி வேகத்தில் லாங்லிவ் யங் சுவாமிஜி (இளம்துறவியே வாழ்க) என்று கோஷமிட்டனர். அந்த சப்தத்தில் சுவாமிஜியால் மேற்கொண்டு பேச முடியவில்லை. அவர் அப்படியே நின்று கொண்டிருந்தார்.