பதிவு செய்த நாள்
23
அக்
2021
09:10
சென்னை : சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நீண்ட இடைவெளிக்குப் பின் நேற்று, தங்கத் தேரோட்டம் நடந்தது. தங்கத் தேரில் எழுந்தருளிய உற்சவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், தங்க தேர்கள் உள்ளன. நேர்த்திக் கடன் நிறைவேற்றும் பக்தர்கள் இந்த தங்க தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் அனைத்து கோவில்களிலும் தங்க தேர் பவனி நிறுத்தப்பட்டது. கொரோனா முதல் அலை கட்டுக்குள் வந்த நிலையில், ஒரு சில கோவில்களில் மீண்டும் தங்கத் தேர் பவனி நடந்தது.
அதற்குள் இரண்டாவது அலை வேகமெடுத்ததால், தங்கத் தேர் பவனி நிறுத்தப்பட்டதுடன், கோவில்களில், பக்தர்கள் தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. அரசின் தொடர் நடவடிக்கைகள், தடுப்பூசி முகாம்கள் வாயிலாக, கொரோனா தொற்று பரவல் வேகம் குறைந்துள்ளது. இதையடுத்து, ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவில்களில் அனைத்து நாட்களிலும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து கோவில்களிலும் தங்கத் தேர் பவனிக்கும் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதன் துவக்கமாக, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று, தங்கத் தேரோட்டம் நடந்தது. இதற்கான கட்டணத்தை செலுத்தி, முதல் நபராக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு முன்பதிவு செய்திருந்தார். நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு, தங்கத் தேரை இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தங்கத்தேரில் எழுந்தருளிய உற்சவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.