பதிவு செய்த நாள்
25
அக்
2021
06:10
மேட்டுப்பாளையம்: லிங்காபுரத்தில் புதிதாக திருப்பணிகள் செய்த, மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிறுமுகை அடுத்த லிங்காபுரத்தில், பழமை வாய்ந்த மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாகாளியம்மன், கணபதி, கருப்பராயர் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று, 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, திருப்பணிகள் செய்யப்பட்டன. திருப்பணிகள் நிறைவடைந்த இந்நிலையில், கும்பாபிஷேக விழா துவங்கியது.
முதல் நாள் கணபதி ஹோமத்துடன், விமான கலசம் நிறுவுதல், முதல்கால வேள்வி பூஜைகள் நடந்தன. இரண்டாவது நாளான நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து காலை, 8:00 மணிக்கு யாகசாலையில் இருந்து, மூர்த்திகளுக்கு அருள்நிலை ஏற்றி, மகா தீபாராதனை செய்யப்பட்டது. பின்பு யாகசாலையில் இருந்து, தீர்த்த குடங்களை நாதஸ்வர இசை, மேளதாளம் முழங்க, கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது. அதைத்தொடர்ந்து பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் விமான கோபுர கலசத்திற்கும், மாகாளியம்மன் பரிவார மூர்த்திகளுக்கும், புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி, அருளாசி வழங்கினர். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அருள்நெறி மன்றத்தை சேர்ந்த குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் கும்பாபிஷேக சிறப்பு பூஜைகளை செய்தனர். கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.