பதிவு செய்த நாள்
30
ஜூன்
2012
10:06
எழுமலை: மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் முத்தாலம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். உத்தப்புரத்தில் இரு பிரிவினருக்குள் அரச மர வழிபாடு, நிழற்குடை கட்டுதல் பிரச்னைகளால் பல ஆண்டுகளாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அங்கு புறக்காவல் நிலையம் அமைத்து போலீசார் தினமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்னையால் ஒரு பிரிவினருக்கு சொந்தமான புனரமைக்கப்பட்ட முத்தாலம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு போலீசார் தடை விதித்தனர்.எஸ்.பி., யாக இருந்த அஸ்ரா கர்க் தலைமையில் இரு பிரிவினருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் புனரமைக்கப்பட்ட முத்தாலம்மன், மாரியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். அனைவருக்கும் புனிதநீர் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேகத்தை காண திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அஸ்ரா கர்க் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் தெற்கு தெருவில் இருந்து ஒரு பிரிவினர் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் நிகழ்ச்சியை கோயில் வெளியில் இருந்து பார்த்தனர். பின் மாலை சாத்துவது குறித்து சிறு சலசலப்பு ஏற்பட்டது. போலீசார் சமாதானம் செய்தனர். எஸ்.பி., பாலகிருஷ்ணன், ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன், எழுமலை இன்ஸ்பெக்டர் தினகரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், எம்.எல்.ஏ., கதிரவன், டி.ஐ.ஜி., பாலநாகதேவி, உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., சாந்தி, பேரையூர் தாசில்தார் கல்யாணசுந்தரம், திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை மாநில இணை அமைப்பாளர் சின்மயா சோமசுந்தரம், பா.ஜ., கல்வியாளர் அணி துணைத் தலைவர் பொன்.கருணாநிதி, இந்து முன்னணி நிர்வாகி ரவிக்குமார் பங்கேற்றனர்.