பதிவு செய்த நாள்
01
நவ
2021
11:11
வாலாஜாபாத் : உள்ளாவூர் கிராமத்தில்10ம் நுாற்றாண்டு விஷ்ணு துர்க்கை சிலையை வரலாற்று ஆய்வு மையத்தினர், கண்டுபிடித்தனர். இது குறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:வாலாஜாபாத் அடுத்த, உள்ளாவூர் கிராமத்தில், அகத்தீஸ்வரர் கோவில் பின்புறத்தில், 10ம் நுாற்றாண்டு சோழர் காலத்தைச் சேர்ந்த விஷ்ணு துர்க்கை சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இது, 1,100 ஆண்டுகள் பழமை சிலை என கூறலாம்.இந்த விஷ்ணு துர்கையின் சிலையில், தலை ஜடா மகுடம், காதில் பத்ர குண்டலம், கழுத்தில் சரப்பளி ஆபரணங்கள், மார்பில் கச்சை, வலது கரங்களில், முதல் கரம் பக்தர்களை அருள்பாலிக்கிறார்.
மற்றொரு கரத்தில் எரிநிலை சக்கரத்தை கையில் ஏந்தி உள்ளார்.இடது இரு கரங்களிலும், ஒரு கரத்தில் சங்கும்; மற்றொரு கரம் இடுப்பில் கைவைத்தபடி அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகளுடன் காணப்படுகிறது.ஆடையின் இருபுறமும் வளர்ந்த மடிப்புடன்கூடிய முடிச்சுகள் காணப்படுகின்றன. கால்களின் அருகே, வலதுபுறம் பூக்கூடை ஒன்று. இடது புறம் சந்தனப்பேழை பாத்திரங்களில் பழங்கள் நிறைந்து காணப்படுகின்றன.இது, தொண்டை மண்டல சிற்பங்களில், தனி பொக்கிஷம் என, தொல்லியல் துறை வல்லுனர்கள் தெரிவித்தனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.